Perambalur: New fire station at Veppanthattai worth Rs. 2 crore 33.60 lakhs: Launch today!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் இன்று காலையில் ரூ 2 கோடியே 33 லட்சத்தி 60 ஆயிரம் மதிப்பில் புதிய தீயணைப்பு நிலையத்தை கலெக்டர் ந.மிருணாளினி, எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் திறந்து வைத்தார். வேப்பந்தட்டை வட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக தாலுகா தலைநகரில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் இன்று எசனை முதல் பில்லங்குளம் வரையிலான 43 கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய தீயணைப்பு நிலையம் ரூ.2 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு முதல் கட்டமாக வேப்பந்தட்டை யூனியன் அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை கலெக்டர் ந.மிருணாளினி எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் திறந்து வைத்தார். அப்போது, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா, ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர் அனுசுயா, உதவி மாவட்ட தீயணைப்பாளர் வீரபாகு, திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் டி ஆர் சிவசங்கர், வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த தீயணைப்பு நிலையத்தில் ஒரு தீயணைப்பு நிலைய அலுவலர், 2 முன்னணி தீயணைப்போர், 3 எந்திர கம்மியர் ஓட்டுநர், 11 வீரர்கள் இங்கு பணிபுரிந்து சேவை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.