Perambalur: Open-air drinking water tank; Panchayat administration provided cover!

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எசனை கிராமத்தில் கடைவீதி அருகே காமாட்சியம்மன் கோயில் உள்ளது. அதன் அருகே 2024 – 2025 திட்டப்பணியின் கீழ், ஊராட்சி பொதுநிதியில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் போர்வெல் அமைத்து, சிறிய தொட்டி அமைக்கும் பணி நடந்து முடிந்தது. ஆனால், அந்த தொட்டியின் மேற்பகுதி முற்றிலும் மூடப்படாமல் திறந்த வெளி தொட்டியாக இருந்தது.

இதனால், குரங்குகள், பறவைகள், குளிப்பது, குடிப்பதுடன் எச்சமும் இட்டு செல்கின்றன. மேலும், காக்கை போன்ற பறவைகள் எடுத்து வரும் இறந்த எலிகள் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை தொட்டியில் போட்டு விட்டு செல்கின்றன. மேலும், காற்று வீசுவதால் தண்ணீரில் மண், புழுதி, குப்பைகள் காற்றில் பறந்து தொட்டியில் விழுந்துவிடுகிறது. இதனால், பாசி மற்றும் பூஞ்சைகள் சூரிய ஒளியில் வேகமாக வளருவது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தும் குடிநீர் தொட்டி மூடப்படாமல் கிடந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்றிரவே, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி செயலர் சரவணன் தலைமையில் அந்த குடிநீர் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, தொட்டியின் மேல் கடப்பா கற்கள் கொண்டு மூடப்பட்டு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!