Perambalur: S.I.R. Voter List Special Intensive Correction Applications are being distributed door to door; Collector N. Mrinalini inspected the work.

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026-க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப்ப படிவங்கள் வாக்காளர்களின் வீடு வீடாக வழங்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் மற்றும் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எசனை ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ந.மிருணாளினி இன்று பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கும் பணியில் 108 அங்கன்வாடி பணியாளர்கள், 101 கிராம நிர்வாக அலுவலர்கள், 6 ஊராட்சி செயலர்கள், 68 சத்துணவு பணியாளர்கள், பிற அலுவலர்கள் 40 நபர்கள் என மொத்தம் 332 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல, குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கும் பணியில் 149 அங்கன்வாடி பணியாளர்கள், 121 கிராம நிர்வாக அலுவலர்கள், 1 ஊராட்சி செயலர், 42 சத்துணவு பணியாளர்கள், பிற அலுவலர்கள் 7 நபர்கள் என மொத்தம் 332 வாக்குச்சாவடி நிலை அலவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி 04.11.2025 முதல் 04.12.2025 வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். கணக்கெடுப்பு படிவத்தில் நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ள பெயர், புகைப்படத்துடன் அனைத்து விவரங்களும் தலைப்பில் வழங்கப்பட்டு இருக்கும். அதன்பிறகு கோரப்பட்டிருக்கும் அனைத்து சுய விவரங்களையும் ஒவ்வொரு வாக்காளரும் நிரப்பிட வேண்டும்.
கணக்கெடுப்பு படிவத்தினை பெற்றிட்ட வாக்காளர் இதற்கு முன்பு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலில் தனது பதிவுகளை https://elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று நிரப்பிடலாம். வாக்காளர் பெயர் முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்காவிட்டால் அவர்களது தாய், தந்தை அல்லது தாத்தா மற்றும் நெருங்கிய உறவினரின் பெயர் மற்றும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த விவரங்களை கண்டறிந்து அவரது பெயரை உறவினர் பெயராக நிரப்பிடலாம். அந்நேர்வுகளில் வாக்காளருக்கு கணக்கீடு படிவத்தினை நிரப்பிட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி புரிவார்கள்.
அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னர் தங்கள் வசமுள்ள 2 படிவங்களில் ஒரு பிரதியில் வாக்காளர் கையொப்பமிட்டு தேவைப்படின் புதிய புகைப்படத்தினை ஒட்டி வாக்குச்சாவடி நிலை வசம் திருப்பி அளித்திட வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர் தங்களுக்கு வரப்பெற்ற கணக்கெடுப்பு படிவத்தில் நிரப்பப்பட்டுள்ள விவரங்களை இப்பணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்து சரிபார்த்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அனுப்புவார்கள். எதிர்வரும் டிசம்பர் 09 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்கள், இறந்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது.
இக்கணக்கெடுப்பு பணியினை உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அந்தந்த வருவாய் வட்டாட்சியர்களும் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு வாக்காளர் பதிவு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்காளர் பதிவு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் கண்காணித்திடுவார்கள். வாக்காளர்கள் இது தொடர்பாக தங்களுக்கு தேவையான விளக்கங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, உதவி வாக்காளர் பதிவு அலுவலரும், பெரம்பலூர் தாசில்தாருமான பாலசுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497