பெரம்பலூர் அருகே சாலையோர பெயர் பலகையில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபமாக உயிரிழந்ததோடு, தாய் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வடலூர் சேராக்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 40), இவர் அதே பகுதியில் ரைஸ் மில்லும், அரிசி கடையும் நடத்தி வருகிறார்.
இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி பி.இ., பயோடெக் முதலாமாண்டு படித்து வரும் மூத்த மகள் சாந்திதேவியை(19) பார்ப்பதற்காக இன்று காலை
வடலூரிலிருந்து சுந்தரபாண்டியன் தனது மனைவி தெய்வானை(39) இளைய மகள் வர்ஷாதேவி(12) ஆகியோருடன் காரில் பெரம்பலூர் வந்து மூத்த மகளான சாந்திதேவியை பார்த்து விட்டு, இன்று மாலை காரில் வடலூரை நோக்கி, திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதி அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள இரும்பினாலான தகவல் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுந்தரபாண்டின், அவரது மகள் வர்ஷாதேவி மற்றும் மனைவி தெய்வானை ஆகியோர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சுந்தரபாண்டியனும், வர்ஷாதேவியும் சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தனர். தெய்வானை மேல்சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் மங்களமேடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிட்ரிக்மேனுவல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.