Perambalur: Students stage road blockade for teachers!

பெரம்பலூர் மாவட்டம், அடைக்கம்பட்டி அருகே உள்ள தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக கற்பகம் பொறுப்பு வகித்து வருகிறார். இப்பள்ளியில் 17 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 290 மாணவர்கள், 140 மாணவிகள் என 440 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும், பின்னர், நாளடைவில் அது கருத்து மோதலாக மாறியது. இதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சுவாமி முத்தழகனுக்கு புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேற்று சர்ச்சையில் சிக்கிய 4 ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதில் நல்லாசிரியர்கள் விருது பெற்ற 2 பேரும் இருந்தனர். அவர்களை மீண்டும், தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கே பணி மாற்றம் செய்ய வேண்டும் என்று மாணவ – மாணவிகள் தேனூர்- து.களத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இதற்காக கற்கள் மற்றும் கட்டைகளை வைத்து சாலையை மறித்தனர். இதனால், அவ்வழியாக பஸ்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து தடைப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் மற்றும் சி.இ.ஓ சுவாமி முத்தழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய மாணவ – மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் ஆசிரியர்கள் பணியிடமாற்றம் குறித்து பரிசீலனை செய்வதாக மாணவ, மாணவிகளிடம் உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை விலக்கி கொண்டு வகுப்புகளுக்கு சென்றனர். ஆசிரியர்களுக்காக மாணவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து நடத்திய போராட்டத்தால் தேனூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!