Perambalur: Subsidy to farmers for setting up shade net huts, honey production, onion storage warehouses; Collector’s information!
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்ட செயலாக்கத்திற்கு 2025-26ஆம் நிதியாண்டில் உத்தேச பொருள் இலக்கீடாக 5,396 எண்கள் / எக்டர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ.720.98 லட்சம் பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் பயனடையும் வகையில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்பட உள்ளன. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக நீர் சேகரிப்பு அமைப்பு, வீரிய ரக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க நிழல் வலைக்குடில் போன்றவை 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
தேனீப் பெட்டிகள், தேனீக்கள் மற்றும் தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு பின்பு சேமித்து வைப்பதற்காக 25.00 மெ.டன் (1 யூனிட்) கொண்ட குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு 50% மானியத்தில் பணி முடித்தவுடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளன.
மேலும், இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் 31.07.2025- க்குள் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.