Perambalur: Subsidy to start farmer welfare service centers; Collector informs!

மாதிரிப் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் 2025-26 ஆம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்ட முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடங்க இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.
இத்திட்டத்தின் கீழ் தோட்டக்கலை / வேளாண்மை / வேளாண் வணிகம் / வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு (Degree) மற்றும் பட்டயப்படிப்பு (Diploma) முடித்த நபர்கள் உழவர் நல சேவை மையத்தினை மானியத்தில் அமைத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் முதல் 20 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மையங்கள் அமைத்திட 30 சதவீத மானியமாக ரூ.3 இலட்சம் முதல் ரூ.6 இலட்சம் வரை வழங்கப்படும். இம்மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள், தோட்டக்கலை விளை பொருட்களை மதிப்புக் கூட்டுதல் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின்பு உரிய GST எண்ணுடன் இத்திட்டத்தில் மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register இணைய தளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகுதியான திட்டக் கூறுகளுக்கான கடன் தொகைக்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் 3 சதவீத வட்டி மானியமும் பெறலாம்.

இத்திட்டத்தில் இணையும் பயனாளிகள் உழவர் நல சேவை மையங்களை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு வேளாண்மை அறிவியல் மையத்தில் பயிற்சி அளிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துளார்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!