பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தை பூசத் தேரோட்டம் அன்று மாலை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, கடந்த 16 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு வாஸ்து சாந்தி, கணபதி பூஜையுடன் கோடியேற்ற நிகழ்ச்சியும், தொடர்ந்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் அலங்கார வாகனத்தில் புறப்பாடும் நடைபெற்றது.
தொடர்ந்து, கடந்த 10 நாட்களும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வைபவமும், நாள்தோறும் காலை 10 மணிக்கு பல்லக்கில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.
22 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், குதிரை, வெள்ளி மயில் வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத் தேரோட்டம் இன்று மாலை 4.40 மணிக்கு நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட உற்சவர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரதான வீதிகள் வழியாக இழுத்துவரப்பட்ட திருத்தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில், செட்டிக்குளம், பொம்மனப்பாடி, இரூர், ஆலத்தூர் கேட், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவையொட்டி, பெரம்பலூர், துறையூர், அரியலூர் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் தக்கார் பி. ஜெயதேவி, செயல் அலுவலர் ப. கௌதமன், விழா குழுவினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
திங்கள்கிழமை (ஜன. 25) இரவு 9 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
இதேபோல, பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தைப்பூசத்தை யொட்டி, சப்பரத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள பிரதான சாலைகள் வழியே இழுத்துச் செல்லப்பட்ட சப்பரம் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில், பெரம்பலூர் நகர பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொண்டைமாந்துறை பழனியாண்டவர் கோயிலில் திருத் தேர்திருவிழாவும், மாவட்டத்தில் உள்ள மற்ற முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இந்துக்கள் அனைவரும் தைப்பூச திருவிழாவை கொண்டாடினர். கோவில்களில் அன்னதானமும் நடைபெற்றது.