Perambalur: Two killed, 8 injured in two separate road accidents!!
பெரம்பலூர் அருகே இன்று நடந்த வெவ்வேறு விபத்துகளில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் (51). இவரது மகன் ஈஸ்வரன் (18) சென்னையில் உள்ள சத்யபாமா கல்லூரியில் படிக்க விட்டுவிட்டு வருவதற்காக ஒரு காரில் இன்று காலை செங்காட்டுப்பட்டியில் இருந்து சென்னைக்கு திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். காரை பெரம்பலூர் மாவட்டம், டி.களத்தூரை சேர்ந்த தனபால் (51) என்பவர் ஓட்டிச் சென்றார், கார், சுமார் 9.45 மணி அளவில், பெரம்பலூர் அடுத்த வல்லாபுரம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உருண்டது. இதில், காரில் பயணித்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த டிரைவர் தனபால், ஈஸ்வரன் மற்றும் டி.களத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (51) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இது குறித்து மங்கலமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு விபத்து:
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பருப்பு லோடு ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முத்துக்குடி மகன் லிங்கதுரை (49) என்பவர் ஓட்டிச் சென்றார். லாரி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் 4 ரோடு மேம்பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, சுமார் 10. 45 மணி அளவில் கரூர் மாவட்டம் வளநாட்டில் இருந்து சென்னைக்கு சென்ற கார் லாரியின் பின்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரை சேர்ந்த சங்கர் (48) பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். காரில் வந்த அதே ஊரைச் சேர்ந்த வரதன் மகன் அய்யனார் (36), ரங்கநாதன் மகன் முருகன் (40), முருகனின் அண்ணன் ராஜா (43), ராஜேந்திரன் மகன் வினோத்குமார் (39) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை மீட்ட பெரம்பலூர் போலீசார் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இரண்டு விபத்துகள் குறித்தும் வழக்குப் பதிவு செய்த மங்கலமேடு, மற்றும் பெரம்பலூர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று இந்த 2 விபத்துகளும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.