Perambalur: Two people died after getting caught in an electric fence erected for wildlife!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மருதை மகன் பெரியசாமி (62), மற்றும் கந்தசாமி மனைவி செல்லம்மாள் (55) இவர்கள் இருவரும் வெண்பாவூர் கிழக்கே உள்ள வனப்பகுதியை ஒட்டிய தங்களது விவசாய நிலத்தில், மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்காச்சோளபயிர்களை சாப்பிட காட்டுப்பன்றி, மான், நரி, மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுத்து, பாதுகாக்க பெரியசாமி தனது வயலைச் சுற்றி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் மக்காச்சோள பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்திட பெரியசாமியும், பக்கத்து நிலத்துக்காரரான செல்லம்மாளும் இன்று வயலுக்கு சென்றிருந்த நிலையில் எதிர்பாராமல் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரெங்கராஜ் அளித்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்காச்சோள பயிரைக் காக்க சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர்களது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.