Perambalur: Women protest against Arun Nehru MP who inaugurated the drinking water project: Appeal to build a community center!

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையத்தில் இன்று மாலை தொகுதி எம்.பி அருண்நேரு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.91 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணி மற்றும் 15வது நிதி ஆணைய மானிய திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி என ரூ.5.36 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு கலெக்டர் ச.அருண்ராஜ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

குரும்பலூர் பேரூராட்சி 7வது வார்டு அண்ணா தெருவில், 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், வார்டு எண் 13 காமராஜர் தெருவில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியும் கட்டும் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டது.
இக்குடிநீர் திட்டப் பணிகளுக்காக பாளையம் ஏரி அருகே மற்றும் மேட்டாங்காடு பகுதியில் 2 திறந்தவெளி கிணறு அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

அப்போது அங்கிருந்த 13வது வார்டை சேர்ந்த பெண்கள். எம்.பி அருண்நேருவை சந்தித்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அங்கு தண்ணீர் டேங் அமைக்காமல், சமுதாயக் கூடம், மகளிர் மன்றம், அங்கன்வாடி மையம், பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டி தர வேண்டும் என்றும், தண்ணீர் டேங்கை மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்றும், தொடர்ந்து தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். அதற்கு எம்.பி அருண்நேரு சமுதாயக்கூடம் அமைக்க 6 சென்ட் அளவுள்ள இடம் வேண்டும், கலெக்டரிடம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். இடத்தை அளந்து பார்த்து உங்கள் கோரிக்கை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் என உறுதி அளித்தார். பெரம்பலூர் ஊரக போலீசார், ஊர்க் காவல் படையினர் பெண்களை காரை மறித்துவிடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக இப்பிரச்சனை தொடர்பாக காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 பேரை காவலில் வைத்திருந்தனர் என கூறப்படுகிறது.

இதில், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளளர் ம.ராஜ்குமார், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் சுப்ரமணியன், செயல் அலுவலர் க.தியாகராஜன், பேரூராட்சி தலைவர்கள் குரும்பலூர் சங்கீதா ரமேஷ், அரும்பாவூர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், பூலாம்பாடி பாக்கியலட்சுமி, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!