Perambalur: Ungaludan Stalin Project Camp; Minister Sivasankar received petitions from the public!
ஊரகப் பகுதிகளுக்கான முகாம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வ.களத்தூர் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பார்வையிட்டு, பொதுமக்களிடம் தேவைகள் மற்றும் கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்தார்.
பின்னர், மனுக்கள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கர், மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களிடம் என்ன கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க வந்துள்ளீர்கள், மனுக்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அனைத்து மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசு விதிமுறைகளுக்கு உட்படாமல் அளிக்கபடும் பொதுமக்களின் மனுக்கள் தொடர்புடைய நபர்களுக்கு அதன் விவரங்கனை தெரிவித்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதேபோல வ.களத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பொதுமக்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைக்காமல் விரைவாக அனைத்து மனுக்களையும் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.