Petition to Perambalur Collector against use of coal in MRF tyre factory!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகர் மற்றும் ராமலிங்க நகர் பகுதிகளை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள், இன்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தில், தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ஆர். சுப்பிரமணியன் தலைமையில் கொடுத்த மனுவின் விவரம்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் ஊராட்சியில் MRF தனியாருக்கு சொந்தமான டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் வெளிவரும் கரும் புகையினால் அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு நுரையீரல் கோளாறு, சிறு நீரகம் கோளாறு, கல்லீரல் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, இறப்பு உள்ளாகி வருவதாகவும்,

தற்போது நிலக்கரியை கொண்டு இயந்திரங்களை இயக்குவதற்கு டயர் தொழிற்சாலையில் முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. சுமார் 500 டன் நிலக்கரியை இறக்குமதி செய்து எந்தவிதமான முன் அனுமதியும் இல்லாமல் சோதனை ஓட்டம் நடத்துவதாகவும், இந்த சோதனை ஓட்டம் முடிந்தவுடன் நிலக்கரியை கொண்டு, முழு வீச்சில் இயந்திரங்களை இயக்குவதற்கு இந்த டயர் தொழிற்சாலை நிறுவனம் தயாராகி வருவாக தெரிவித்தனர்.

அதோடு, இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, நாரணமங்கலம், மருதடி, விஜயகோபாலபுரம், காரை, சமத்துவபுரம் மலையப்ப நகர், ராமலிங்கம் நகர்,அயிலூர், சிறுவாச்சூர், வரகுபாடி, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீரில் ரசாயனம் கலந்து, விவசாயம் அழிந்து வருவதாகவும், குடி நீர் அதன் தன்மை மாறிவிட்டதாகவும்,

டயர் தொழிற்சாலையின் பின்புறமுள்ள மிக அருகாமையில் குடியிருந்து வரும் மலையப்ப நகரை சேர்ந்த 150 நரிக்குறவர்கள் குடும்பங்களும் மற்றும் ராமலிங்கம் நகரை சேர்ந்தத 40 டோப்ரா (கலைக்கூத்தாடி) குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த மலையப்ப நகர் மற்றும் ராமலிங்கம் நகரில் வசிக்கும் நரிக்குறவர்கள் கலைக்கூத்தாடிகள் திடீர், திடீரென்று இறந்து விடுகின்றனர். 28.06.2022 அன்று ஆர்.சுதா என்பவர் டயர் தொழிற்சாலை புகையால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு தினறலால் இறந்துவிட்டார் என்றும்,

செங்கமலை என்பவருக்கு கேன்சர்(புற்றுநோய்) வந்து இறந்துவிட்டார் என்றும், மோ.கருணாநிதி என்பவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார் என்றுமம், நரிக்குறவர் சமூகத்தில் ஊனமுற்ற குழந்தைகள் பார்ப்பது அரிது. டயர் தொழிற்சாலை இந்த பகுதிக்கு வந்த பிறகு இரு குழந்தைகள் ஊனமுற்ற குழந்தைகளாக பிறந்துள்ளார்கள் என்றும், அதற்கு காரணம் டயர் தொழிற்சாலைதான் என தெரிவித்தனர்.

நரிக்குறவர்கள், கலைக்கூத்தாடிகள் இன மக்கள் வசிக்கும் மிக அருகில் இந்த டயர் தொழிற்சாலை அமைந்துள்ளதால் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது. காரணம் இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை காற்றில் கலந்து பொதுமக்களின் உயிரை பறித்து வருகிறது. நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்று உணவருந்தி, நரிக்குறவர் இன மக்களின் குறைகளை கேட்டறிந்து செயல்பட்டு வரும் கருணை உள்ளம் கொண்ட தமிழக முதலமைச்சரின் சீர்மிகு ஆட்சியில், பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் டயர் தொழிற்சாலையால் மூலம் இப்படி ஒரு கொடுமை நடைபெற்று வருகிறது.

நிலக்கரி மூலம் தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் இயக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, ஏற்கனவே நடந்த சுற்றுச்சூழல் கருத்து கேட்டு கூட்டத்தில் எம் ஆர் எப் நிறுவனமானது நிலக்கரியை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது என்று முழு மனதாக தீர்மானிக்கப்பட்டு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்ட திட்டத்தை, சட்டத்திற்கு புறம்பாக தொடங்கப்பட உள்ளதாக தெரிய வருவதால், இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று உடனடியாக ரத்து செய்து, சட்டத்தை மீறுபவர்களை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

டயர் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் வருகிற ஜீலை 20-ம் தேதி நிலக்கரி பயன்பாட்டை மிகப்பெரிய அளவில் துவக்கி வைக்க விழா ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் இப்பகுதி பொது மக்களின் நலன் கருதி, இனி வரும் காலங்களில் நிலக்கரி பயன்பாட்டை இந்த டயர் தொழிற்சாலை நிறுவனம் எப்போதுமே பயன்படுத்தக்கூடாது என்றும், நிரந்தரமாக நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்றும், இந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் நோயில்லாமல் உயிர் வாழவும், விவசாயத்தை காப்பாற்றவும், இப்பகுதி பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகு தான் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!