Pongal Festival: Tamilnadu government’s garment (Kadhi) Dothi and sarees for 2,87,260 people in Perambalur district
பெரம்பலூர் : விவசாயத்தை அடுத்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக நெசவுத்தொழில் விளங்கி வருகிறது.
கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு 2018 ஆம் ஆண்டிற்கான விலையில்லா, வேட்டி-சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி,சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் வட்டத்தில் 36,620 வேட்டிகளும், 36,932 சேலைகளும், வேப்பந்தட்டை வட்டத்தில் 38,292 வேட்டிகளும், 40,141 சேலைகளும், குன்னம் வட்டத்தில் 39,213 வேட்டிகளும், 38,232 சேலைகளும், ஆலத்தூர் வட்டத்தில் 28,866 வேட்டிகளும், 28,964 சேலைகளும் என மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 260 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.