Public petition to the Namakkal Collector demanding to stop setting up Tasmac wine shop
நாமக்கல் : அக்கலாம்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து அக்கலாம்பட்டி கிராம பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் கொடுத்துள்ள மனுவின் விவரம்:
நாமகிரிப்பேட்டையில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் அக்கலாம்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு செல்லும் முக்கிய சாலையில் டாஸ்மாக் அமைக்கப்பட உள்ளதாக அறிந்தோம். அக்கலாம்பட்டி கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊரில் இருந்து சுமார் 150 மாணவ, மாணவிகள் நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிக்கு மேற்படி சாலை வழியாக சென்று தான் படித்து வருகின்றனர்.
இந்த ஊரிலிருந்து பெண்கள், ஆண்கள் அனைவரும் நாமகிரிப்பேட்டைக்கு சென்றுதான் பொருட்கள் வாங்கவோ, வேலைக்கு சென்று வர வேண்டும். மேற்படி இடத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால் சாலை வழியாக செல்லும் பெண்களுக்கு குடிமகன்களால் தொல்லை ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே இப்பகுதியில் டாஸ்மாக் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மேற்படி இடத்தில் டாஸ்மாக் அமைக்கப்பட்டால் ஊர் பொதுமக்கள் நாமகிரிப்பேட்டை சாலையில் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.