Public road traffic protesting against drinking water at Perambalur District
பெரம்பலூர் அருகே குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில் உள்ள கிழக்கு தெருவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு சாத்தனவாடி செல்லும் சாலையில் உள்ள குடிநீர் கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வறட்சியினால் இந்த கிணற்றில் போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீருக்காக அவதிப்பட்ட இப்பகுதி பொதுமக்கள் இன்று காலை ஒன்று சேர்ந்து குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து நெய்குப்பை-வேப்பந்தட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பந்தட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப் பட்டதால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் நெய்குப்பை-வேப்பந்தட்டை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த சாலையின் வழியாக
பஸ்சில் பள்ளி – கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.