Pudhumai Pen Project: Launched by Transport Minister Sivashankar in Perambalur!

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 446 மாணவிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு/ பட்டயப் படிப்பு/ பட்டப்படிப்பு/ தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ1,000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத குழந்தை திருமணத்தை தடுத்தல், மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர் ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்தல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மாணவிகள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம்’ வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் Right to Education (RTE)-ன் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

மேலும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,371 மனுக்கள் பெறப்பட்டு விசாரனை செய்து 446 மாணவிகளுக்கு வங்கி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 571 மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக வர பெற்றுள்ள 865 மனுக்களை விசாரிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் டி.ஆர்.ஓ. அங்கையற்கண்ணி, ஆர்.டி.ஓ. நிறைமதி, பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் ஆலத்தூர் என்.கிருஷ்ணமூர்த்தி, வேப்பந்தட்டை க.ராமலிங்கம், வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை, பெரம்பலூர் மீனா அண்ணாதுரை, நகர்மன்ற துணைத்தலைவர் .ஹரிபாஸ்கர், பேரூராட்சி தலைவர்கள் குரும்பலூர் சங்கீதா ரமேஷ், பூலாம்பாடி பாக்கியலட்சுமி, அரும்பாவூர் வள்ளியம்மை, மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!