Rajiv murder case: Supreme Court verdict to release seven people is very high: Vaiko

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுதுள்ள அறிக்கை:

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் எள் அளவும் தொடர்பு அற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும், 27 ஆண்டுகளாக கொடிய நரக வேதனையை, தாங்க முடியாத மன சித்ரவதைகளை அனுபவித்தனர். அவர்கள் இளமை வாழ்வே இருண்டு சூன்யமானது.

2014 பிப்ரவரி 18 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம் அவர்கள் அமர்வு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பு அளித்தது. மறுநாள் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சிறையில் இருந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு அமைச்சரவையைக் கூட்டி முடிவு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மத்திய அரசு, ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று, நான்கு ஆண்டுகளாக உச்சநீதி மன்றத்தில் முட்டுக்கட்டை போட்டு வந்தது.

இந்தப் பின்னணியில், தங்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு விண்ணப்பம் கொடுத்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனுவைத் தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அமர்வு ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்று அறிவித்து விட்டது.

ஏழு பேரும் துன்ப இருட்சிறையில் இருந்து வெளி உலகத்துக்கு வரப்போகின்றார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, தலைவணங்கி, வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறேன். ஏனெனில் இதுமாதிரியான வழக்குகளில், இந்திய அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவு மாநிலங்களுக்கு வழங்கும் அதிகாரத்தை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திவிட்டது. இனிமேல் மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தில் இத்தகைய பிரச்சினைகளில் குறுக்கிட முடியாது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!