Requires firm action to prevent the Earth temperature rise to 1.5 degrees ! Anbumani MP
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :
உலகை காப்பாற்ற வரலாற்றில் முன் எப்போதும் இருந்திராத அவசர கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அக்டோபர் 8 ஆம் நாள் தென் கொரியாவில் வெளியிடப்பட்ட, ஐ.நா. காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக்குழுவின் சிறப்பு அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.
காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுவினர் இரு ஆண்டுகளாக தயாரித்து கடந்த 8-ஆம் தேதி தென் கொரியாவில் வெளியிட்ட ‘‘வெப்பநிலை 1 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ள நிலையிலேயே பெரும் பாதிப்புகள் நேருகின்றன. அடுத்த 12 ஆண்டுகளில் இந்த வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசை எட்டிப்பிடிக்கும். அதனால் வரும் காலங்களில் இயற்கை சீற்றங்களின் தாக்குதல் மென்மேலும் அதிகரிக்கும். புவிவெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்திப்போம். அதுவே 2 டிகிரி செல்சியல் அளவை கடந்துவிட்டால், சமாளிக்கவே முடியாத பேரழிவுகளை உலகம் எதிர்க்கொள்ள வேண்டும்’’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்ற பேராபத்துகளை குறைக்க பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டுக்கு மிக விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவற்றால் வெளியாகும் கரியமிலவாயுவை 2050 ஆம் ஆண்டில் முற்றிலுமாகக் ஒழிப்பது அவசியமாகும். பாரிஸ் காலநிலை உடன்படிக்கையை செயலாக்குவதற்கான விதிமுறைகளை வகுப்பதற்காக வரும் திசம்பரில் போலந்து நாட்டில் நடைபெறும் ஐநா காலநிலை மாநாட்டில் உறுதியான முடிவுகளை மேற்கொள்ள இந்த சிறப்பு அறிக்கை வழிவகுக்கும்.
காலநிலை மாற்றமும் அது குறித்த ஐநா செயல்பாடுகளும் எங்கோ நடக்கும் நிகழ்வுகள் அல்ல. இவை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் வாழும் ஒவ்வொருவரையும் பாதிக்கும் நிகழ்வுகள் ஆகும். இப்போது மட்டுமல்லாமல், இனிவரும் தலைமுறையினரையும் காலநிலை மாற்றம் பாதிக்கும். உலகில் மிக மோசமான பாதிப்புகளை எதிர்க்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஐநா சிறப்பு அறிக்கை எச்சரித்துள்ளது. உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு 1 டிகிரி செல்சியசாக இருந்தாலும், இந்தியாவில் அது 1.2 டிகிரி செல்சியசாக உள்ளது. இதனால் புயல், வெள்ளம், வறட்சி, உணவு உற்பத்தி பாதிப்பு உள்ளிட்டவை இந்தியாவில் மிகவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ஒருபக்கம் காலநிலை மாற்றத்தால் தீவிரமடையும் இயற்கை சீற்றங்களை எதிர்க்கொள்ளும் தகவமைப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மறுபக்கம், காலநிலை மாற்றத்துக்கு காரணமாகும் கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை பொருத்தவரை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை சமாளிப்பதற்கான தகவமைப்பு செயல்பாடுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கான சென்டாய் பேரிடர் கட்டமைப்பு அடிப்படையில் ஒருங்கிணைந்த பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மேலும், தண்ணீர் பற்றாக்குறையைத் தடுக்க நீர் மேலாண்மைக்கான முழுமையான திட்டங்களை வகுக்க வேண்டும்.
கரியமிலவாயு வெளியாகும் அளவை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுப்போக்குவரத்து வசதிகளை, குறிப்பாக பேருந்து வசதிகளை அதிகமாக்குதல், திடக்கழிவு மேலாண்மையை அறிவியல் பூர்வமாக கையாளுதல், தூக்கி எறியும் பிளாஸ்டிக் தடையை மும்முரமாக செயலாக்குதல், புதிய கட்டடங்களை பசுமை கட்டடங்களாக அமைக்க வழிசெய்தல், சூரிய ஆற்றலையும் காற்று ஆற்றலையும் முழுமையாக பயன்படுத்துதல் என பல வழிகளிலும் தமிழ்நாட்டில் கரியமிலவாயு அளவை குறிக்க வழி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் கரியமிலவாயு வெளியாவதை அதிகரிக்கும் திட்டங்களான ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பெட்ரோகெமிக்கல் திட்டங்களை கைவிட வேண்டும். மேலும், கரியமிலவாயுவை குறைக்க வழிசெய்யும் இயற்கை வளங்களை காப்பாற்றவும், பசுமை பகுதிகளை அதிகமாக்கவும் வேண்டும்.
இவ்வாறு, ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று பட்டு, பசுமையான, இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறைக்கு மாற முன்வர வேண்டும். அதற்கான கட்டமைப்புகளையும் விதிமுறைகளையும் உருவாக்குவது தமிழக அரசின் தலையாய பணியாக இருக்க வேண்டும். மேலும், இந்த ஆண்டு போலந்து நாட்டில் நடக்கும் ஐநா காலநிலை மாநாட்டில், காலநிலை மாற்றத்தை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தும் உறுதியான முடிவுகளை எடுக்க இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.