Rs.1 cr in compensation to the family who went into a coma by accident: court order

விபத்தால் கோமா நிலைக்கு சென்ற சென்னை கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு பெரம்பலூர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பெரம்பலூர் மின்நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர், சென்னை கொளத்தூரில் தங்கி ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார்.

கடந்த2013 ஆண்டு ஜுன் மாதம் 5ம் தேதி அன்று கொளத்தூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சதீஷ்குமார் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சதீஷ்குமாருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த போது சதீஷ்குமார் கோமா நிலைக்கு சென்று விட்டார். கோமா நிலையில் இருந்து சதீஷ்குமாரை மீட்டெடுக்க அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அப்போது விபத்துக்கு காரணமான பாலசுப்பிரமணியன், தனது மோட்டார் சைக்கிளுக்கு மும்பையைச் சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விபத்தில் கோமா நிலைக்கு சென்ற தனது மகனுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக் கோரி சதீஷ்குமாரின் தந்தை துரைசாமி, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2014–ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

இதற்கிடையே பெரம்பலூரில் உள்ள வீட்டில் கோமா நிலையில் உள்ள சதீஷ்குமாரை நேரில் நீதிபதி பார்வையிட்டு மருத்துவ செலவுகள் குறித்து அவரது பெற்றோரிடம் கேட்டறிந்தார்.

பின்னர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷீமாபானு தீர்ப்பு கூறினார். அதில், கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சதீஷ்குமார் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கியதையும், பின்னர் விபத்தில் கோமா நிலைக்கு சென்ற செலவு தொகை உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து ரூ.1 கோடியே 4 லட்சத்து 16 ஆயிரத்து 7-யை இழப்பீடாக அவரது பெற்றோருக்கு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். விபத்து வழக்கில் பெரம்பலூர் கோர்ட்டு வழங்கிய அதிகபட்ச இழப்பீடுத் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!