Rs 4,100 crore agriculture loan offer in Namakkal district of goal setting: Collector Information

விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்கும் வகையில் 2019-20ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களை மேம்படுத்த ரூ.4 ஆயிரத்து 100 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தின் 2019-20ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீட்டு விழா நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள வளங்களின் திறன் அடிப்படையில் நபார்டு வங்கியின் 2019-20ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்டமானது 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்குதல் என்ற நோக்கத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதாவது விவசாயிகளை கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, விவசாயம் சாரா தொழில்களிலும் ஈடுபடுத்தி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் நாமக்கல் மாவட்டத்துக்கு முன்னுரிமை கடனாக ரூ.6 ஆயிரத்து 240 கோடி வழங்கிட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறுகிய கால பயிர்க் கடனாக ரூ.2 ஆயிரத்து 560 கோடி, வேளாண் தொழில் சார்ந்த, விவசாய கட்டமைப்புகள், உணவு, பயிர் பதனிடும் தொழில்கள் செய்ய கடனாக ரூ.ஆயிரத்து 545 கோடியும் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் ரூ.800 கோடி எனவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புதிய முன்னுரிமை கடன் கொள்கையின்படி, ஏற்றுமதி கடன் ரூ.250 கோடி, கல்விக் கடன் ரூ.135 கோடி, வீடு கட்டுமான கடன்கள் ரூ.162 கோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கடன் ரூ.100 கோடி, சுயஉதவிக்குழுக்கள்- கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கு கடனாக ரூ.550 கோடி என வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த தொழில்களை விரைந்து மேம்படுத்த வங்கியாளர்கள், அலுவலர்கள் இணைந்து பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொள்ளவேண்டும் என்றார் ஆட்சியர்.

கடன் திட்ட அறிக்கை முதல் பிரதியை, ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் சேதுராமன் பெற்றுக்கொண்டார். நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!