Subsidy up to Rs. 30 lakhs for youth to start businesses in Perambalur district; Call to apply online

பெரம்பலூர் மாவட்டகலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் அறிவித்திருப்பதாவது:

மாவட்டங்கள்தோறும் படித்த வேலையற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்கவும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படவும் தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்கிட இந்த திட்டத்தின் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை தமிழக அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும்.

கடன் பெறுவர்களில் பொது பிரிவினர் ஆண்களில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினரில் பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 5 சதவீதமும் சொந்த முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப்பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் இதர பிரிவினர்களுக்கு 21 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம். கடனுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 31ந் தேதி வரை கடன் வழங்கப்படும். கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்து தமிழக அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இணையதளத்தில் கல்வித்தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்ற செய்ய வேண்டும்.

மேலும் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 04328 – 225580, 224595 என்ற தொலைபேசியில் அல்லது பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை நேரில் அணுகலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!