Supreme Court verdict is welcome: release 7 Tamils today! Anbumani
தருமபுரி எம்.பியும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்து 161&ஆவது பிரிவின்படி தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 7 தமிழர்களும் எதிர்கொண்டு வரும் இருள் நிறைந்த பாதை முடிவடைந்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.
7 தமிழர்களின் விடுதலைக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக தேவையில்லாத முட்டுக்கட்டைகளை மத்திய அரசு போட்டு வந்தது. அந்த முட்டுக்கட்டைகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு தகர்த்திருக்கிறது.
ராஜிவ் கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு மே – ஜூன் மாதங்களில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைகளில் அடைக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன.
இவர்களில் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் தூக்குத் தண்டனை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள மூவரின் தூக்கு தண்டனையும் கடந்த 2014&ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி குறைக்கப்பட்டது.
இவர்கள் 14 ஆண்டு சிறை தண்டனைக் காலத்தை ஏற்கனவே நிறைவுசெய்து விட்ட நிலையில், அரசுகள் விரும்பினால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 432, 433 ஆகியவற்றின்படி இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த ஆலோசனைப்படி தமிழக அரசு முடிவெடுக்க மத்திய அரசு அனுமதித்து இருந்தால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகியிருக்கும். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதுகுறித்த கருத்தை மத்திய அரசு 3 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என்றும் அப்போது தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த தனது பதிலை தெரிவிக்காத மத்திய அரசு, 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அத்துடன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை நடத்த விடாமல் மத்திய அரசு தாமதித்து வந்தது.
அதுமட்டுமின்றி, 7 தமிழர் விடுதலை தொடர்பான மற்ற வழக்குகளிலும் 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான நிலைப்பாட்டையே மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து விட்ட நிலையில், அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது குறித்து மத்திய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருக்கும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 3 முறை அறிவுறுத்தியும் அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. 7 தமிழர்களும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் சிறைகளில் வாட வேண்டும் என்பது தான் மத்திய ஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருந்தது. அதை முறியடித்து 7 தமிழர்களுக்கும் உச்சநீதிமன்றம் நீதி வழங்கியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பை முடக்கும் நோக்கத்துடன் சீராய்வு மனு, மேல்முறையீட்டு மனு போன்றவற்றை மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடாது. அதேநேரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை உடனடியாக பெற்று, இன்று மாலையே அமைச்சரவையைக் கூட்டி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப வேண்டும். தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பேரறிவாளன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு ஆளுனர் மாளிகையில் நிலுவையில் இருப்பதால் அவற்றின் அடிப்படையில் 7 தமிழரையும் விடுதலை செய்து ஆளுனர் ஆணையிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.