Tamil Nadu is the 3rd place in the scam: Implementing the Right to Service Act! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

எதிர்மறையான சாதனைகளை படைப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் தமிழகம் இப்போது மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இந்தியாவில் ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது மிகவும் வேதனையும், வருத்தமும் அளிக்கிறது.

ஊழலை ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தி டிரான்பரன்சி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியக் கிளை தமிழ்நாடு உள்ளிட்ட 215 மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் அவர்கள் எதிர்கொண்ட ஊழல் அனுபவங்கள் குறித்து ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைகளைப் பெற்றது.

அவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிரித்துள்ளன. அந்த மாநிலங்களில் முறையே 59%, 56% ஊழல் நிலவுவதாக கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். இப்பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்திலிருந்து இதில் பங்கேற்றவர்களில் 52% பேர் அரசு சேவையைப் பெற கையூட்டு தர வேண்டியிருந்ததாக கூறியுள்ளனர்.

தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த துறையாக திகழ்வது பத்திரப்பதிவுத் துறை ஆகும். 44% ஊழல் இத்துறையில் தான் நடப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக 17% ஊழல் காவல்துறையிலும், 15% ஊழல் உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறுகின்றன. மின்துறை, போக்குவரத்துத் துறை, வரி செலுத்தும் துறை ஆகியவற்றில் 25% ஊழல் நடப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதில் யாருக்கும், எந்த ஐயமும் தேவையில்லை. தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிலவுவதை அத்துறையை அணுகியவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

ஊழல்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமல்ல. கடந்த 50 ஆண்டுகளாகவே அரசு நிர்வாகத்தில் ஊழல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் ஆட்சியாளர்கள் நேர்மையாளர்களாக இல்லாதது தான். அவர்களைப் பார்த்தும், அவர்கள் கொடுக்கும் அழுத்தம் மற்றும் நெருக்கடிகளுக்கு பணிந்தும் தான் பெரும்பான்மையான அதிகாரிகளும் ஊழல்வாதிகளாக மாறுகின்றனர். இதற்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியா முழுவதுமே ஊழல் புற்றுநோயாக பரவி வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூடுதலாக வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இங்கு ஊழலை ஒழிக்க எந்தவிதமான சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும், ஊழல் செய்வதும் கையூட்டு வாங்குவதும் தங்களின் சிறப்புரிமை என்று பெரும்பான்மையான அதிகாரிகள் நினைப்பது தான். அரசு நிர்வாகத்தில் காணப்படும் ஊழல்களை உயர்நீதிமன்றம் பலமுறை கண்டித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எந்த ஆதாரமும் இல்லாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி உதவி பெறுவதற்கு தேவையான சான்றுகளை வழங்கவும், கணவர் மறைந்த நிலையில் பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட ஆதரவற்ற தாய் அவருக்கான அரசு உதவித் தொகையை பெறுவதற்கு தேவையான சான்றுகளைக் கொடுக்கவும் கையூட்டு வாங்குவதை விட மிகக்கொடூரமான குற்றம் எதுவும் இருக்க முடியுமா? இதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்த ஊழலை ஒழிக்க வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள், ஊழலுக்கு ஆதரவாளர்களாக மாறி ஊழல்வாதிகளைக் காப்பாற்றவும், ஆதரிக்கவும் துடிப்பது தான்.

அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க ஒரே வழி பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை இயற்றி செயல்படுத்துவது தான். அதனால் தான் தமிழகத்தில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கடந்த 6 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. சாதிச்சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின்இணைப்பு வழங்குதல், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை இந்த சட்டத்தின் மூலம் பெறமுடியும்.

பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சேவை வழங்கப்படாவிட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகார் செய்து தேவையான சான்றிதழ்களை பெறலாம். மேலும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.5000 வரை இழப்பீடு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அரசு நிர்வாகத்தில் ஊழல் தொடர வேண்டும் என்பதற்காகவே இச்சட்டத்தை கொண்டு வர தமிழக ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இனியும் இத்தகைய சூழல் நிலவுவதை அனுமதிக்க முடியாது. எனவே, நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில் சேவை உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!