“Tamil Nadu’s journey of the head of the Tamil Nadu”: BJP’s event will be held in Perambalur on October 24th; Interview with Karup Muruganandam, the in-charge of the Greater Sector!

தமிழகம் தலை நிமிர தலைவனின் பயணம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப் பயணம் செய்ய உள்ளளார். அதற்கான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் கே.ஜி.எம். மஹாலில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பி. முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் பெருங்கோட்ட பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் எம். வரதராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் ஆ.ராம்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் அணி தலைவர்கள் பிரிவு தலைவர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகின்ற 12.10.25 ந் தேதி மதுரையில் மக்களைச் சந்திக்கக்கூடிய பயணத்தைத் தொடங்க இருக்கிறார். பயணத்தினுடைய தலைப்பாக “தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” என்ற தலைப்பிலே மக்களைச் சந்திக்க இருக்கின்றார்.

​ஏனென்றால், தமிழகத்தை தலைகுனிய வைத்துக் கொண்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணத்தை ஊழல் செய்வதிலே ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கக்கூடிய, இளைஞர்களைப் போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கி, அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துத் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கக்கூடிய, சட்ட ஒழுங்கு இன்றைக்குத் தமிழகத்திலே சந்தி சிரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையை உருவாக்கி இருக்கக்கூடிய, இப்படிப் பல தலை குனிவுகளை தமிழகத்திற்கு ஏற்படுத்தி இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம், “தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டோம்” என்று மக்களைச் சந்திக்கத் துவங்கியிருக்கின்றார்கள்.

​தமிழர்களுக்கு, தமிழ்நாட்டிற்குக் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டு, எங்கேயோ இருந்து யாரோ தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தப்போவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சிக்கிறது. ​பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகம் முழுவதும் சென்று தமிழர்களுடைய பெருமையை, தமிழ்நாட்டினுடைய பெருமையை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். ​தமிழனுக்கு, தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பிரதமர் அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

​ராஜேந்திர சோழனுடைய புகழை, இராஜராஜ சோழனுடைய புகழை, திருவள்ளுவனுடைய புகழை இன்றைக்கு உலகம் முழுவதும் எடுத்துச் சென்றிருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. ​அப்படிப்பட்ட மத்திய அரசாங்கம் ஏதோ தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தப்போவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சியிலே திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட்டிருக்கிறது. ​அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திற்குச் செய்திருக்கக்கூடிய துரோகங்களைத் தோலுரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும்,

​ எப்படிப்பட்ட துரோகங்களை எல்லாம் தமிழர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தை வேரறுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், ​தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி அகற்றப்பட்டு, தமிழகம் தலை நிமிர வேண்டும் என்ற நோக்கத்தோடு தன்னுடைய யாத்திரையை 12.10.25 ந் தேதி மதுரையிலே துவக்க இருக்கின்றார்.

​அந்த மக்கள் சந்திப்புப் பயணம் 24.10.25 ந் தேதி அன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர இருக்கின்றோம். ​எனவே, இன்றைக்குப் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் முத்தமிழ்செல்வன் அவர்களுடைய ஏற்பாட்டில் இங்கிருக்கக்கூடிய நிர்வாகிகளை எல்லாம் சந்தித்து, பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநிலத் தலைவருக்குச் சிறப்பான வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஆலோசனை கூட்டத்திலே நாங்கள் கலந்து கொண்டிருக்கின்றோம். ​மிகச்சிறந்த வரவேற்பை கொடுப்பதற்குப் பெரம்பலூர் மாவட்டம் தயாராக இருக்கிறது. எங்களுடைய நிர்வாகிகள் எல்லாம் மிகப்பெரிய உற்சாகத்தோடு இருக்கின்றார்கள். நிச்சயமாக தலைவருடைய பயணம் என்பது தமிழகத்திலே அரசியல் மாற்றத்தை உருவாக்கும், தமிழகத்தைத் தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.

கேள்வி: அ.தி.மு.க வந்து தன்னோட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும்போது நேற்றைய தினம் த.வெ.க-வுடைய கொடியை அந்தக் கட்சி தொண்டர்கள் காட்டியிருக்காங்க. அதுக்கு எடப்பாடி அவர்கள் இதோ தொடங்கிட்டோம் பாருங்கள், சிக்னல் கொடுத்துட்டாங்க பாருங்கள் என்ற மாதிரியான கருத்துக்களை முன்மொழிந்திருக்காரு. என்.டி.ஏ கூட்டணியில் இருக்கக்கூடிய எடப்பாடியார் த.வெ.க விற்கு அழைப்பு விடுகிறாரா? இல்ல த.வெ.க வந்து இணையுமாங்கிறதை சூசகமாகச் சொல்ல வர்றாரா? கடுமையான விமர்சனத்தை வச்சிட்டு வர்றாரு பா.ஜ.க மேல விஜய். இதில் வந்து என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள், சாத்தியங்கள் இருக்கா?

​பதில்: (கருப்பு முருகானந்தம்): கரூர்-க்கு முன்பு, கரூர்-க்கு பின்பு அப்படி என்றுதான் நீங்க பார்க்கணும்.
​கூட்டணிக்கு வருவாரா, வரமாட்டாரா, அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஏனென்றால், அது தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய தலைவர் எடப்பாடி அவர்கள்தான் முடிவு பண்ணப் போகிறார்கள்.
​ஆனால், கரூர்-க்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தினுடைய நடவடிக்கைகள் மாற ஆரம்பித்திருக்கு. ஏனென்றால், கரூர்ல அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பிறகு, ஒரு மிக துயரமான சம்பவத்திலே பல சந்தேகங்கள் அவர்களுக்கு இருக்கின்றது. இது ஆளும் கட்சியால் ஏற்படுத்தப்பட்ட சதியே என்ற சந்தேகம் கூடத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருக்கின்றது.

​அப்படிப்பட்ட சந்தேகத்திற்குப் பிறகு, அவர்களுடைய பிரச்சாரம் இன்றும் துவங்கப்படவில்லை. அவர்களுடைய பிரச்சாரம் துவங்குகின்ற பொழுதுதான் அவர் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கின்றார் என்பது நமக்குத் தெரியும். ​கொடி பிடித்துக்கொண்டு வருகிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுகின்ற பொழுது, இன்னல் ஏற்படுகின்ற பொழுது, அவர்களுக்கு ஆதரவாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கருத்துத் தெரிவித்திருக்கின்றது. பாரதிய ஜனதா கட்சி கூட நாங்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றோம். ஏனென்றால் இதைப்பற்றி ஆய்வு பண்ணனும், சிபிஐ என்கொயரி பண்ணனும், இது எதனால் நடந்தது, இந்த உயிரிழப்புகள் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி சிபிஐ என்கொயரி பண்ணனும் என்று பாரதிய ஜனதா கட்சி கூட நாங்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றோம். அவருக்கு ஆறுதலான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்ற காரணத்தினால், அவர்களுடைய தொண்டர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கலாம். அவர்கள் கூட்டணிக்கு வருவார்களா, வரமாட்டார்களா என்பதெல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடைய தலைவர் எடப்பாடி அவர்கள் முடிவு செய்வார்.

கேள்வி: விஜய் சொல்றாரு, ரெண்டே கட்சிக்குத் தான் போட்டி. ஒன்னு தி.மு.க. இன்னொன்னு த.வெ.க ன்றாரு. அப்ப அந்த த.வெ.க குள்ள தான் இந்த என்.டி.ஏ கூட்டணிகள்…?

​பதில்: அது நான் சொன்னது போல் கரூர்-க்கு முன்பு, கரூர்-க்கு பின்பு. அது கரூர்-க்கு முன்பு பேசின விஷயங்களை நீங்க சொல்லிட்டு இருக்கீங்க. கரூர்-க்கு பின்பு என்ன பேசப் போகிறாங்க என்பதைப் பார்ப்போம்.

கேள்வி : பெரம்பலூரில் பா.ஜ.க உறுப்பினர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
பதில்: பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சியிலே 52,000 உறுப்பினர்கள் இருக்காங்க. பொது மக்களுடைய ஆதரவைப் பொறுத்துத்தான் அரசியல் கட்சி வெற்றி பெறுவது. உறுப்பினர்களை மட்டும் வச்சு எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. ​அதனால் இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி வீழ்த்தப்படணும் என்று மக்கள் விரும்புறாங்க. இப்படிப்பட்ட ஒரு காட்டாட்சி இருக்கக் கூடாது என்று மக்கள் விரும்புறாங்க. அதை வந்து நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது எங்களுடைய கூட்டணியினுடைய கடமை அப்படிங்கிற அடிப்படையில எடப்பாடி அவர்கள் ஒரு பக்கம் மக்களைச் சந்திச்சிட்டு இருக்காரு. நாங்க ஒரு பக்கம் மக்களைச் சந்திக்கிறோம்.

கேள்வி: மாவட்டம் முழுவதும் பூத் கமிட்டியில் உறுப்பினர்கள் இருக்கிறார்களா?

​பதில் : எல்லா பூத்துக்கும் B.L.A – 2 போட்டு அரசாங்கத்துல எங்க கட்சி சார்பாகக் கொடுத்திருக்கிறோம். தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய எல்லா பூத்துக்குமே. நீங்கள் கேட்கின்ற கேள்வி கடந்த காலம். இப்ப ஒவ்வொரு பூத்திலேயும் பாரதிய ஜனதா கட்சி வலிமையா இருக்கு. நீங்க 24.10.25 ந் தேதி நடக்கக்கூடிய நிகழ்ச்சிக்குப் பிறகு பெரம்பலூர் மாவட்டத்துல பாரதிய ஜனதா கட்சி எப்படி இருக்கு அப்படிங்கிறதை நீங்க பார்க்கலாம் என தெரிவித்தார்.

முன்னாதாக கூட்டத்தில் பேசும் நடத்த குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேரையாவது நிர்வாகிகள் அழைத்து வர முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!