Teacher shortage in northern districts: Is the government ready to give a white report? PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் சமத்துவம் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதை தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. அனைத்து மாணவர்களையும் சமமாக கருதி கல்வி வழங்க வேண்டிய அரசு, ஒரு பகுதி மாணவர்களுக்கு மட்டும் கல்வி வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதை தெரிந்தே அனுமதித்து வருவது மன்னிக்க முடியாத பாவம்; கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர்த்த பிற வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அரசு பள்ளிகளில் 5,472 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அதே நேரத்தில் மதுரைக்கு அப்பால் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இந்த புள்ளி விவரங்கள் உத்தேசமானவை அல்ல. இந்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனே அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பல வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. கணிதப் பாடத்திற்கான ஆசிரியரே இயற்பியல் பாடத்தை நடத்துவதும், வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர்கள் உயிரியல் பாடம் நடத்துவதும் வாடிக்கையான நிகழ்வுகளாகி விட்டன. ஒரு பாடத்திற்கான ஆசிரியரால் இன்னொரு பாடத்தை துல்லியமாக நடத்த முடியாது என்பது ஒருபுறமிருக்க, மாணவர்கள் மீது அக்கறையும், தாராள மனமும் படைத்த ஆசிரியர்கள் தான் இவ்வாறு கூடுதல் பாடம் எடுக்க முன்வருகின்றனர். இத்தகைய ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு பல பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை.

அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு இரு ஆசிரியர்கள்; ஒரு பாடத்திற்கு இரு ஆசிரியர்கள் என்ற நிலை காணப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துகின்றனர். தென் மாவட்டங்களில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதற்கும், வட மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருப்பதற்கும் இது தான் காரணமாகும். தேர்ச்சி விகிதத்தில் ஏற்படும் இந்த இடைவெளி அனைத்து நிலைகளுக்கும் பரவுகிறது. வட மாவட்டங்கள் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கும், மனித வாழ்நிலைக் குறியீடுகளில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களுக்கு தள்ளப்பட்டிருப்பதற்கும் இதுவே காரணமாகும்.

இந்த நிலைக்கு காரணம் பள்ளிக்கல்வித்துறையில் நிலவும் ஊழல் தான். பொதுவாகவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆசிரியர் கல்வி படித்தவர்கள் அதிகம். அவர்கள் தான் அதிக அளவில் ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் சொந்த மாவட்டங்களுக்கு இடம் பெயர விரும்புகின்றனர்.

பொதுக் கலந்தாய்வு மூலம் தென் மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால் எந்த சிக்கலும் இல்லை. மாறாக, ஓர் இட மாறுதலுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கையூட்டு பெற்றுக் கொண்டு வட மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் தென் மாவட்டங்களுக்கு மாற்றப்படுகின்றனர். அதேநேரத்தில் வட மாவட்டங்களுக்கு எந்த ஆசிரியரும் வர மறுப்பதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சியாளர்கள் கையூட்டு வாங்கிக் குவிக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களை விருப்பம் போல இடமாற்றம் செய்து ஒரு பகுதி மாணவர்களின் கல்விக் கனவை சிதைப்பதை அனுமதிக்க முடியாது. வட மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதற்கான அனைத்துக் காரணங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வந்து, அதன் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக கீழ்க்கண்ட வினாக்களுக்கு தமிழக ஆட்சியாளர்களிடமிருந்து விடைகள் பெறப்பட வேண்டும்.

வட மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், தென் மாவட்டங்களில் ஆசிரியர்கள் உபரியும் எவ்வளவு காலமாக நீடிக்கிறது?

கடந்த 7 ஆண்டுகளில் நிர்வாக மாறுதல் மூலம் எத்தனை ஆசிரியர்கள் மாற்றப்பட்டனர்?

வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில் அங்கிருந்த ஆசிரியர்கள் எந்த அடிப்படையில் தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்?

தென் மாவட்டப் பள்ளிகளில் உபரியாக ஆசிரியர்கள் இருப்பது தெரிந்தும் அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது ஏன்?

தென் மாவட்டங்களில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களை வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய தடையாக இருப்பது எது?

மேற்கண்ட ஐந்து வினாக்களுக்கும் விடையளிக்கும் வகையில் கடந்த 7 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆசிரியர்கள் நிர்வாக இடமாறுதல் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!