The award ceremony for the students who won in Silambam in Namakkal

நாமக்கல்லில் சிலம்ப கலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் பாரத மாதா சிலம்பபயிற்சி பள்ளிகள் சார்பில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சிறப்புரைகள் 125ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிலம்பகலை மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நாமக்கல் அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு பாரத மாதா சிலம்பப்பயிற்சி பள்ளி தலைவர் டாக்டர் எழில்செல்வன் தலைமை வகித்தார். அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் கிருத்திகா, மத்திய அரசு வழக்கறிஞர் மனோகரன், நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் மோகன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரத சிலம்பப்பயிற்சி பள்ளி சத்யா வரவேற்றார்.

விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம் பூரண சேவானந்தமகராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:

இந்தியா மற்றும் இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் உயரே தூக்கி நிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர் ஆவார்.இந்தியாவில் தான் வாழ்ந்த காலக்கட்டத்தில் சமயப்பற்றை விடவும் நாட்டுப்பற்று மிகவும் முக்கியம் என்பதை நன்று உணர்ந்திருந்தவர். தன் அயராத உழைப்பின் மூலம் அதைச் செயல்படுத்தியும் காண்பித்தவர். விவேகானந்தரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது, 1893-ம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் அவர் ஆற்றிய உரைதான்.

இந்தியாவில் இருந்து இந்து மதப் பிரதிநிதியாக சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் கலந்துகொண்டார். ‘சகோதர, சகோதரிகளே‘ என்று அவர் தன் உரையை ஆரம்பித்த உடனேயே பலத்த கரவொலி எழுந்து, அது அடங்க வெகுநேரமாயிற்று. விவேகானந்தர் அந்த மாநாட்டில் நிகழ்த்திய உரை இந்து மதத்தின் பெருமையை உலக நாடுகளிடையே பறைசாற்றும் வகையில் அமைந்தது. ’எக்காரணத்தைக் கொண்டும் தைரியத்தை விட்டுவிடக் கூடாது’ என்பதை விவேகானந்தர் தன் உரைகளின் மூலம் உலகுக்கு எடுத்துரைத்து வந்தார்.

எந்தவொரு பிரச்னையையும் கண்டு நாம் பயந்து ஒதுங்கினால், அது நம்மைத் துரத்தும். நாம் பிரச்னைகளை எதிர்த்து நின்றோமானால் அவை நம்மை விட்டு விலகிச் சென்றுவிடும் என்றார்விவேகானந்தர் என பேசினார்.

விழாவில் நம்மாழ்வார் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன், கொண்டிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சபூர் அகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளைதமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்க மாநில போட்டி இயக்குநர் கார்த்திகேயன், பாரத சிலம்பப் பயிற்சிப்பள்ளியை சேர்ந்த பசுபதி, நவீந்த், மோகன்ராஜ், பிரவீன், மோகனா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!