The bankers should provide allocated loan assistance to the Public: Namakkal Collector

வங்கியாளர்கள் ஆண்டுக்கடன் திட்ட அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து கடன் உதவிகளையும் முழுமையாக வழங்கி இலக்கை எய்த வேண்டும் என்று வங்கியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஆசியா மரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார்.
கடந்த மார்ச் மாதம் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் சார்பில் தயாரிக்கப்பட்டு மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்ட நாமக்கல் மாவட்டத்திற்கான ஆண்டு கடன்திட்ட அறிக்கையில் முன்னுரிமை கடன் திட்டங்களுக்காக ரூ.5775.25 கோடியும், வேளாண்மை கடன் திட்டங்களுக்காக ரூ.3343.62 கோடியும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ.969.46 கோடியும், பிற முன்னுரிமைக்கடன் திட்டங்களுக்காக ரூ.1463.62 கோடியும், அதில் கல்விக் கடனாக ரூ.85.45 கோடியும், வீட்டுக் கடனாக ரூ.205.46 கோடியும் கடன் வழங்கத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

மொத்தக் கடன் அளவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட வர்த்தக வங்கிகளின் பங்கு ரூ.4020.40 கோடியாகவும், கூட்டுறவு வங்கிகளின் பங்கு ரூ.1531 கோடியாகவும், பல்வவன் கிராம வங்கியின் பங்கு ரூ.176.13 கோடியாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின பங்கு ரூ.48.32 கோடியாகவும் தயாரிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில் ஆண்டு கடன் திட்ட அறிக்கையில் வெளியிடப்பட்ட இலக்கீட்டின்படி கல்விக்கடன் வழங்குதல், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கடன் வழங்குதல், மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு வழங்கப்படும் பொருளாதாரக் கடன்கள், சுழல் நிதி கடன்கள், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கடனுதவி திட்டங்கள், மாவட்ட தொழில்மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நீட் திட்டம், வேலை உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட தொழில் முனைவோர் திட்டங்களுக்கு வழங்கப்படும் கடன்கள், பால் பண்னை, கோழிப் பண்னைகளுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் ஆகிய திட்டங்களின் கீழ் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தங்கள் பகுதியில் நடப்பு மாதம் வரை எய்தப்பட்ட கடன் வழங்கும் இலக்குகள் குறித்து வங்கி வாரியாக மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். வங்கியாளர்கள் கடன் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்கையும் எட்ட வேண்டும் என்றும், அனைத்து அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்திட வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் இந்தியன் வங்கி ஈரோடு மண்டல மேலாளர் சுசிலா பார்த்தசாரதி, ரிசர்வ் வங்கி உதவிப் பொதுமேலாளர் சேதுராமன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் தினேஷ், இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் தாமோதரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு உட்பட வங்கி அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!