The first students to suicide in state: mental health counselor in schools in need! Doctor Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

அறிவையும், தெளிவையும் ஏற்படுத்த வேண்டிய கல்வி முறை மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி உலகை விட்டே வெளியேற்றுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள உண்மை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டிய காலகட்டம் வந்துவிட்டதையே இது காட்டுகிறது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 2016-ஆம் ஆண்டில் நிகழ்ந்த பள்ளி மாணவர்கள் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்களின்படி மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2016&ஆம் ஆண்டில் மொத்தம் 981 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2.68 மாணவர்கள் தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்திற்கு அடுத்தப்படியாக கர்நாடகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 1.47 பேர் வீதம் 540 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகம் கர்நாடகத்தைத் தவிர மற்ற தென் மாநிலங்களில் மாணவர்களின் தற்கொலை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆந்திரத்தில் தான் இந்தியாவிலேயே மிகவும் குறைவாக 295 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கேரளத்தில் 340 ஆகவும், தெலுங்கானாவில் 349 ஆகவும் இருப்பதாக கணக்கெடுப்பு விவரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய கல்வி முறையின் கட்டாயங்களுடன் இணைந்து செல்ல முடியாததால் ஏற்படும் மன அழுத்தம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனச்சோர்வாக மாறுகிறது. மனச் சோர்வு ஒரு கட்டத்தில் போதைப் பொருட்கள் பழக்கத்திற்கும், மதுவுக்கும் மாணவர்களை அடிமையாக்குகிறது. மனச் சோர்விலிருந்து மதுவும், போதைப் பொருட்களும் நிம்மதி அளிப்பதாக கருதும் மாணவர்கள், ஒரு கட்டத்தில் அவற்றுக்கு அடிமையாகி விடுவதால் கூடுதல் அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மது மற்றும் போதைக்கு அடிமையாகும் மாணவர்களில் 10 முதல் 15 விழுக்காட்டினர் தற்கொலை செய்து கொள்வதாக பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட சமூகக் காரணங்கள், உளவியல் காரணங்கள், மரபுவழிப் பிரச்சினைகள் என பல காரணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட முதன்மையானது கல்வி சார்ந்த பிரச்சினைகள் தான். மாணவர்களின் மாநில வாரியான தற்கொலை எண்ணிக்கையை வைத்தே இதை உறுதி செய்து கொள்ள முடியும். ஆந்திரம், தெலுங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களில் மிக எளிமையான, அதேநேரத்தில் சிந்தனையைத் தூண்டும் கல்வி முறை இருப்பதால் அங்கு மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் கல்வி என்பது சுகமான அனுபவமாக இருப்பதற்கு மாறாக திணிக்கப்படும் ஒன்றாகவும், எந்திரத்தனமான ஒன்றாகவும் மாறி விட்டது தான் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவதற்கு காரணம் ஆகும்.

கல்வி என்பது சுகமானதாகவும், சுமையற்றதாகவும், விளையாட்டுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கல்வி வணிகமயமாக்கப்பட்டதன் விளைவாக மாணவர்கள் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக்கப் பட்டனர். அவர்களின் வயதுக்குரிய இயல்புகளை அனுபவிக்க விடாமல் எந்த நேரமும் படிக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவது தான் மாணவர்களிடையே மிக அதிகமாக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

‘‘காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு – மாலை முழுதும் விளையாட்டு – என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா’’ என்று பாரதியார் பாடினார். ஆனால், இப்போது காலையில் படிக்கவும், மாலையில் விளையாடவும் மாணவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. தினமும் ஒரு பாடவேளை விளையாட்டுக்கும், வாரத்திற்கு இரு பாடவேளை நீதிபோதனைக்கும் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த பாடவேளைகள் மற்ற பாடங்களுக்காக பறித்துக் கொள்ளப்படுவதுடன் பள்ளி நேரத்திற்கு பிறகும் படிப்பு திணிக்கப்படுகிறது. அது அனுபவிக்கத்தக்கதாக இல்லை என்பது தான் சிக்கலுக்கு காரணமாகும்.

மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சரியான நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், விபரீதமான விளைவுகளை தடுக்க முடியும். இதற்காக வாய்ப்பிருந்தால் அனைத்து பள்ளிகளிலும், இல்லாவிட்டால் 2 அல்லது 3 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதற்கெல்லாம் மேலாக கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும், விளையாட்டைக் கட்டாயமாகக் கொண்டதாகவும் மாற்ற தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!