The Keeladi excavations are celebrated; Need to add a textbook! The PMK founder Ramakas

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

சிவகங்கை மாவட்டம் கீழடியில் சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் 2218 ஆண்டுகளுக்கு முந்தியவை என கரிமப் பகுப்பாய்வில் (Carbon dating) தெரிய வந்திருப்பதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்திருக்கிறது. தமிழர் நாகரிகப் பெருமையை குலைக்க பல சதிகள் நடந்தும், அவற்றை முறியடித்து இந்த உண்மை உறுதி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

சங்கக் காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறை, வைகை ஆற்று நாகரிகம் ஆகியவை குறித்த உண்மைகளைக் கண்டறியும் நோக்கத்துடன் மதுரை அருகே, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 4 சுற்று ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், ஆய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்; அப்பொருட்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கரிமப் பகுப்பாய்வு மூலம் கண்டறிய ஆணையிட வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணையின் போது தான், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2218 ஆண்டுகள் பழமையானவை; அமெரிக்காவின் ப்ளோரிடா நகரிலுள்ள பீட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்பட்ட கரிமப்பகுப்பாய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வின் போதே, அங்கு 2400 ஆண்டுகளுக்கு முன்பே கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், அங்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்துப் பார்க்கும்போது அங்கு தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும்; அவற்றில் இருந்து தான் அப்பொருட்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. சங்க காலத்தில் நகர நாகரிகம் செழித்திருந்தது என்பதையும், நாம் நினைப்பதை விட தமிழர் நாகரிகம் தொன்மையானது என்பதையும் கீழடியில் கிடைத்த பொருட்கள் உறுதி செய்திருப்பது உண்மையாகவே கொண்டாடத்தக்கது ஆகும். இப்போது நீதிமன்றத்தில் தொல்லியல் துறை கூறியவற்றை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உண்மை மறைக்கப்படாமல் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும். அதை உறுதி செய்வது தான் தமிழர்களாகிய நமது கடமை ஆகும். கீழடி தமிழர் நாகரிகம் தான் தொன்மையானது என்பது நிரூபிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கீழடி அகழாய்வை சீர்குலைக்க ஏராளமான சதிகள் நடைபெற்றது நினைவிருக்கலாம்.

தொல்லியல் துறை வல்லுனர் அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற முதல் இரு கட்ட அகழாய்வில் ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்ரீராமன் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டு தவறான இடத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை என்று பதிவு செய்ய முயற்சிகள் நடந்தன.

இப்போது கூட முதல் இரு அகழாய்வுகளில் தெரியவந்த உண்மைகள் குறித்த அறிக்கை அளிக்க அமர்நாத் இராமகிருஷ்ணனுக்கு அனுமதி தரப் படவில்லை; உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் அறிக்கை தயாரிக்கும் பணியில் உதவ அனுமதிக்கப் பட்டுள்ளார். இவை அனைத்துமே கீழடி தமிழர் நாகரிகத்துக்கு எதிரான சதிகளின் வடிவங்கள் தான். தமிழருக்கு எதிரான இந்த சதிகளை வரலாற்றின் துணையோடு மட்டும் தான் முறியடிக்க முடியும்.

சிந்து சமவெளி நாகரிகம், மஞ்சளாற்று நாகரிகம், மெசபடோமியா நாகரிகம், நைல் நதி நாகரிகம் போன்றவை குறித்து இன்றும் பேசப்படுவதற்கு காரணம் அவை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிப்பது தான். கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழர் நாகரிகமும் வரலாற்றில் பதிவு செய்யப்படுவதன் மூலம் தான் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் நாகரிகத்தைப் பற்றி உலகம் பேசுவதை உறுதி செய்ய முடியும். அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

கீழடியில் இதுவரை மொத்தம் 4 கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. நான்காம் கட்ட ஆய்வின் போது, தமிழர்கள் பயன்படுத்திய தங்க அணிகலன்களும் கிடைத்துள்ளன. ஆனால், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களில் இதுவரை மொத்தம் 2 பொருட்கள் மட்டும் தான் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது போதுமானதல்ல.

குறைந்தது 200 பொருட்களாவது அமெரிக்காவிலுள்ள பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, அவை எந்தக் காலத்தை சேர்ந்தவை என்பது கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது கீழடி தமிழர் நாகரிகத்தின் வயது இன்னும் அதிகம் என்பது உறுதி செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

கீழடியில் தொல்லியல் ஆய்வுக்காக ஒதுக்கப்பட்ட இடம் 110 ஏக்கர் ஆகும். அதில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவாக பரப்பில் தான் இப்போது ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளையும் ஆயும் வகையில் அடுத்தடுத்தக் கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட வேண்டும்.

அதற்கெல்லாம் மேலாக கீழடி ஆய்வில் இதுவரை தெரியவந்துள்ள தகவல்களைத் தொகுத்து தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் வரலாற்று பாடநூலில் சேர்க்க வேண்டும். அடுத்தடுத்து புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்படும்போது அவற்றையும் சேர்த்து சம்பந்தப்பட்ட பாடங்களை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!