The Namakkal collector has been invited to comment on the change of locomotives without the accent
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
2018-19ம் ஆண்டுக்கான சட்டசபைத் தொடரில் மானியக் கோரிக்கையின்போது பேசிய தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
எடுத்துக்காட்டாக சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியை ஆங்கில உச்சரிப்பின்போது ட்ரிப்ளிகேன் என்றுஉள்ளது. இதை ஆங்கிலத்திலும் திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்களும் தமிழ் உச்சரிப்பை போன்ற ஆங்கிலத்திலும் அதன் ஒலிக்குறிப்பு மாறாமல் அமையும் வகையில் மாற்றப்பட உள்ளது. இதற்காக ஆவணங்களின் அடிப்படையிலும், ஊர் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மாற்றப்பட வேண்டிய ஊர் பெயர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
மாற்றப்பட வேண்டிய ஊர் பெயர்களின் பட்டியல் மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நிலைக்குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். பரிந்துரை செய்யப்படும் ஊர் பெயர்கள் தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் குழுவால் ஏற்கப்பட்டு வெளியிடப்படும்.
எனவே, நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் உச்சரிப்பு போன்று ஆங்கில உச்சரிப்பையும் மாற்றப்பட வேண்டிய ஊர் பெயர்கள் குறித்த விவரங்களை மனுவாக அனுப்பி வைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.