The public will have to register the birth-death process: DRO. Velu

பிறப்பு-இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கூட்ட அரங்கில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:

பொதுமக்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர்களின் பிறப்பு மற்றும் இறப்புக்களை முறையாக பதிவு செய்துகொள்ளவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதன்மூலமாக பிற்காலத்தில் அவர்களுக்கு தேவைப்படும் பாஸ்போர்ட், பள்ளி சேர்க்கை மற்றும் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கும் மிகவும் அவசியமானது.

பிறப்பு-இறப்புக்களை பதிவு செய்யும்போது ஆதார் எண்ணையும் இணைக்கவேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பதிவுகளை அந்தந்த அரசு மருத்துவமனைகளிலும்,

நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்திலும், இதர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கிராம நிர்வாக அலுவலகத்திலும் குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்யவேண்டும். இவ்வாறு பதிவு செய்யும்போது குழந்தைகளின் பெயர்களிலோ அல்லது அவர்களின் பெற்றோரின் பெயர்களிலோ பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறாக பெற்றோர்களின் பெயர்களில் பதிவு செய்த குழந்தைகளுக்கு ஒரு வருட காலத்திற்குள் பெயர் சூட்டி பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும். அவ்வாறு ஒரு வருட காலத்திற்குள் பதிவு செய்யாத குழந்தைகளின் பிறப்புக்களை வட்டாட்சியர் அலுவலகம் சென்று அதற்குரிய தொகையினை செலுத்திய பின்தான் பிறப்பை பதிவு செய்துகொள்ளமுடியும்.

இதேபோன்ற நடைமுறைதான் இறப்பு பதிவிற்கும் பொருந்தும். மேலும், அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கும் பாகப்பிரிவினை உள்ளிட்டவைகளுக்கும், பிறப்பு-இறப்பு பதிவு செய்தல் மிகவும் இன்றியமையாதது என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இறப்பு-பிறப்பு பதிவுகளை எவ்வித சுனக்கம் இன்றி பதிவு செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடத்திலே ஏற்படுத்த சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களும் காலம் தாழ்த்தாது, விடுதலின்றி அனைவரின் பிறப்பு, இறப்பு குறித்த விபரங்களை முறையாக பதிவுசெய்திட முன்வர வேண்டும், எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மருத்துவர் சம்பத் மற்றும் வட்டாட்சியர்கள் சீனிவாசன், தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதிதாசன் மற்றும் பேரூராட்சி செயல்அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!