The role of parents in the progress of government schools is also important: Perambalur Collector speaks at the management committee meeting!
அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் வெங்கடபிரியா முன்னிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் அவர் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 56 அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் 1,120 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்னர். தலைவராகவும், துணைத்தலைவராகவும், உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பள்ளி வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பெற்றோரின் பங்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் அடிப்படையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக்குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது என்றும், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி அளித்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இக்குழுக்களை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் மறுகட்டமைப்பு செய்ய இயலாமல் இருந்தது.

ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் அமைக்கப்படவுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் 20 நபர்கள் உறுப்பினர்களாக இருப்பர். இவர்களில் 15 பேர் பெற்றோர்கள், அதிலும் 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 5 நபர்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், சுய உதவிக் குழுவினர் ஆகியோர் இருப்பர்.

பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ளவர்கள், பள்ளியின் சூழல் மேம்படுவதற்கு எவ்வாறு உதவமுடியும், மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதா, தரமான சுவையான மதிய உணவு வழங்கப்படுகின்றதா, பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா, பாடப் புத்தகம் தாண்டி அவர்களுடைய இதரத் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

குழுவின் தலைவராக அப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர்தான் இருக்கவேண்டும். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அப்பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தையின் பெற்றோர், மாணவர்களின் பெற்றோராக உள்ள தூய்மைப் பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் திருநங்கைகள் எஸ்.சி. எஸ்.டி பிரிவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் பெற்றோர் ஆகியோரில் ஒருவர் துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார். தலைமையாசிரியர் குழுவின் உறுப்பினர் மற்றும் கூட்ட அழைப்பாளராக இருப்பார் .

பள்ளி அமைந்திருக்கும் ஊர் மக்களின் பங்களிப்போடு பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை இக்குழுவின் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள். எனவே, பெற்றோர்கள் ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் இணைந்து நம் பிள்ளைகள் பயிலும் பள்ளியை கற்றலுக்கு மேலும் உகந்த இடமாக ஆக்கி நமது பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்றுவோம், என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் , ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!