The story of kazhagam : Dr. Ramadoss wrote in Perambalur was released on July 3rd
பா.ம.க. தலைமை நிலைய செய்திக் குறிப்பு
அதிமுகவின் தொடக்கம் முதல் இன்று வரையிலான முக்கிய நிகழ்வுகளை இளைய தலைமுறைகளுக்கு விளக்கும் நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா ‘‘கழகத்தின் கதை: அதிமுக – தொடக்கம் முதல் இன்று வரை’’ என்ற தலைப்பில் நூல் எழுதியுள்ளார்.
தமிழக அரசியலில் கடந்த 45 ஆண்டுகளில் நிகழ்ந்த அனைத்து திருப்புமுனைகளையும் விளக்கும் இந்த நூல் வரும் ஜூலை 3-ஆம் தேதி திங்கட்கிழமை பெரம்பலூரில் வெளியிடப்படுகிறது. பெரம்பலூர் பூமணம் திருமண அரங்கத்தில் ஜூலை 3-ஆம் தேதி காலை 10.00 மணியளவில் நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு முன்னிலையில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு அவர்கள் இந்த நூலை வெளியிடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
அதிமுகவின் தொடக்கம் முதல் இன்று வரையிலான நிகழ்வுகளை மருத்துவர் இராமதாசு அவரது கோணத்திலிருந்து பார்த்து, ஆய்வு செய்து இந்த நூலை எழுதியுள்ளார்.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராகவும், முதலமைச்சராக கலைஞர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எம்.ஜி.ஆர் உதவி செய்ததில் தொடங்கி, இப்போது அதிமுகவில் நடைபெறும் கூத்துக்கள் வரை அனைத்து நிகழ்வுகளையும் மருத்துவர் இதில் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
திராவிட இயக்கத்தின் கதை, திமுகவின் கதை, எம்.ஜி.ஆர் கதை என பல தலைப்புகளில் பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அதிமுகவின் ஆதி முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகளை விமர்சனப் பார்வையுடன் விளக்கும் வகையில் இதுவரை எந்த நூலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பகுத்தறிவைக் கடந்து ஒருதரப்பு மக்களால் நேசிக்கப்பட்டனர்; பூஜிக்கப் பட்டனர். அவர்கள் மீது மக்கள் கொண்டிருந்த கண்மூடித்தனமான நம்பிக்கைத் தான் தமிழகத்தில் ஊழலும், சீரழிவும் பெருக வழி வகுத்தது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் செல்வாக்கு மிக்கத் தலைவர்களாக இருந்ததால் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருந்தார்கள். ஆனாலும் அதிமுக ஆன்மா இல்லாத கட்சியாகவே இருந்து வந்தது.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஊழல் செய்தார்கள்; மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்; அவர்களின் ஆட்சியிலும் துப்பாக்கிச்சூடுகள், தடியடிகள், அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆனாலும், திரையில் தோன்றிய எம்.ஜி.ஆரையே உண்மை என்று நினைத்துக் கொண்டு, அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார் என்று மக்கள் நியாயம் கற்பித்தனர். இது தான் தமிழகத்தில் கொள்கை அரசியலைக் குழிதோண்டி புதைக்க வழி வகுத்தது.
கலைஞருக்கு எதிராக அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய போது, அதற்காக அவர் கூறிய காரணம் ‘‘திமுக ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதால் அதை ஒழிக்க வேண்டும்’’ என்பது தான். ஊழலில் ஊற்றுக்கண் திமுக என்றால் ஊழல் சுனாமி அதிமுக தான் என்பதை நிகழ்கால நடப்புகள் விளக்குகின்றன.
கொள்கை இல்லாத கட்சி என்பதால் தான் அதிமுக இன்று மூன்று அணிகளாக உடைந்து, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க பாரதிய ஜனதாக் கட்சியிடம் சரணடைந்திருக்கிறது. இதற்கான பின்னணிகள் அனைத்தும் இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக என்ற இன்னொரு கட்சியின் வரலாற்றை நூலாக எழுதியதற்கான காரணம் பற்றி விளக்கம் அளித்த மருத்துவர் இராமதாசு அய்யா,‘‘அதிமுக தொடங்கப்பட்டு 44 ஆண்டுகளாகிறது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது. ஆனாலும், அக்கட்சி எப்படி உருவானது என்பது 50 வயதைக் கடந்தவர்களுக்கு தெரிந்திருக்கலாமே தவிர, இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிமுக என்பது கொள்கையே இல்லாத, சினிமாக் கவர்ச்சியை மட்டுமே நம்பித் தொடங்கப்பட்ட கட்சி.
இன்றளவும் அதே நிலைமை தான் நீடிக்கிறது. கொள்கை இல்லாத அக்கட்சியால் தமிழக அரசியலில் ஏற்பட்ட பாதிப்புகள், கேலிக்கூத்துக்கள் ஆகியவை குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்வதற்கும், கொள்கை சார்ந்த அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வைப்பதற்கும் வசதியாகவே இந்த நூலை எழுதியிருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
திரைத்துறையினர் பலரும் அரசியல் ஆசைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் இத்தகைய சூழலில், கொள்கை இல்லாமல் சினிமாக் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தொடங்கப்பட்ட அதிமுகவால் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கும் இந்த நூல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.