The sudden demand for donkey milk in the district: 100 ml 500 sales
பெரம்பலூர் மாவட்டத்தின் பல கிராமங்களில், ‘கழுதைப் பால்’ விற்பனை ஜோராக நடக்கிறது. பல்வேறு நோய்களை தீர்க்கும் மருந்து என்ற நம்பிக்கையில், பொதுமக்கள் போட்டி போட்டு, வாங்கி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், வேப்பந்தட்டை, பாலையூர், எசனை, நெய்க்குப்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், ஒரு குடும்பத்தினர், 10க்கும் மேற்பட்ட கழுதைகளுடன், ஊர் ஊராகச் சென்று, கழுதைப்பாலை கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர்.
கேட்பவர்களுக்கு, அங்கேயே கறந்து தருகின்றனர். தினமும் காலை, 6:00 முதல், 9:00 மணி வரை பால் விற்பனை செய்யப்படுகிறது. கழுதைப் பால், 10 மில்லி, 50 ரூபாய்க்கும், 100 மில்லி, 500 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர்.
கழுதைப் பால் குடித்தால் சளி, இருமல், கரப்பான் நோய், மஞ்சள் காமாலை, பித்தம், வெட்டை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் சரியாகும் எனக் கூறி, வியாபாரம் செய்து வருகின்றனர்.
கிராம மக்களும் ஆர்வமுடன் வாங்கி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வருகின்றனர்.*
கழுதைப்பால் விற்கும் பெண் கூறியதாவது:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த நாங்கள், தமிழகம் முழுவதும் சென்று, கழுதை பால் விற்று வருகிறோம். கழுதைப்பால் மருத்துவ குணம் கொண்டது.
வெறும் வயிற்றில், ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்தால் பலன் உண்டு. சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கு போதும். பெரியவர்களுக்கு, 50 மில்லி கொடுக்க வேண்டும்.
நாங்கள், பால் விற்பனைக் காகவே கழுதைகள வளர்க்கிறோம். கழுதையை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு சென்று, கலப்படம் இல்லாமல், அங்கேயே கறந்து விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனை, சித்தா டாக்டர் விஜயன் கூறி யதாவது:கழுதைப் பால், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, மருத்துவ குணம் கொண்டது என, சித்த மருத்துவ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாள்பட்ட நோய்களை தீர்க்கும் என்பது நிரூபிக்கப் படவில்லை. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்தப் பாலும் கொடுக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்