Thanking the minister, the resolution in the state general committee meeting of the Tamil Nadu Public Works Contractors Federation!

தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் 2 வது பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில், மாநில தலைவர் சுதர்சன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் சிவக்குமார், மாநில துணை தலைவர்கள் பழனிவேல், முத்துசாமி, கருப்புசாமி, ஹரிகிருஷ்ணன், மாநில பொருளாளர் பத்மநாதன், மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர்கள் கார்மேகம், அழகேசன், செல்வமணி உட்பட பலர் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில், பொதுப் பணித்துறை இதில் ஒப்பந்ததாரர்கள் பதிவு, நிபந்தனைகளை தளர்த்துதல், விரைந்து மறுவகைப்படுத்துதல் மற்றும் ஜிஎஸ்டி புதிய வரம்பிற்கு உத்தரவிடுதல் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

பொதுவெளியில், வெளிச் சந்தையில் அவ்வப்போது நடைமுறையில் உள்ள கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கு ஏற்ப ஷெட்யூல் ஆப் ரேட்ஸ் எனப்படும் விலைப்பட்டியல் பொதுப் பணித்துறையால் ஒவ்வொரு வருடமும் மாற்றி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டத்திற்கு நாங்கள் அழைக்கப்பட வேண்டும் என்ற எங்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மற்றும் அழைப்பு விடுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் முதன்மை தலைமை பொறியாளர் கட்டிடம் (பொது) ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும்,

பொதுப்பணித்துறை அரசாணை எண் : 195 மற்றும் 37-ன் படி மாற்றியமைக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பதிவு புதுப்பித்தல், மறு வகைப் படுத்துதல், பதிவு செய்தல் ஆகியவைகளுக்கான கால அவகாசத்தை எங்கள் அமைப்பு கேட்டு கொண்டதற்கிணங்க முதல் முறையாக 30.06.2022 வரையிலும், 2-வது முறையாக 31.07.2022 வரையிலும் 3-வது முறையாக 31.08.2022 வரையிலும் தொடர்ந்து கால நீட்டிப்பு செய்து உதவிய பொதுப்பணித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தும்,

ஒப்பந்ததாரர்கள் பதிவு மற்றும் மறுவகைபடுத்துதல் தொடா;பான அரசாணை அதனைச் சார்ந்த சுற்றறிக்கைகளில் கண்டுள்ள ஒப்பந்ததாரர் பதிவிற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவைகளைத் தளர்த்தி நடைமுறையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்ததாரர்கள் எவரும் விடுபடாத வகையில் மாற்றியமைத்து அனைவரும் பயன்பெறும் வகையில் எளிதாக மறுசீரமைத்து சுற்றறிக்கை வெளியிடவும்,

பொதுப்பணித்துறையில் வருடந்தோறும் மாற்றியமைக்கப்படும் விலைப் பட்டியலுக்கான ஆலோசனை கூட்டங்களில் பொருட்களின் விலையேற்றம் மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு பற்றிய விபரங்களை ஆவணங்களுடன் உறுதிப்படுத்தினாலும் விலைப்பட்டியலை தீர்மானிக்கும் நபராக உதவி செயலர் (நிதி) இருக்கிறார். முதன்மை தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், ஒப்பந்ததாரர் சங்கங்கள் ஆகியவைகளுடன் பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து இரண்டு, மூன்று கூட்டங்களில் அனைவராலும் தெரிவிக்கப்படும் ஒட்டு மொத்த கருத்தும் ஒரு தனி நபரால் தீர்மானிக்கப்படுவது ஏற்புடையதல்ல. இதனால் ஒட்டு மொத்த ஒப்பந்ததாரர்களும் பாதிப்படையும் நிலை உள்ளது. ஆகவே, விலைப் பட்டியலை நிர்ணயம் செய்ய சம்மந்தப்பட்ட துறை வல்லுநர்கள் அடங்கிய ஒரு விலை நிர்ணய குழு அமைக்கப்பட வேண்டும் என்றும்,

சமீபத்தில் மத்திய அரசு சரக்கு மற்றும் விற்பனை வரியை அரசு பணிகளுக்கு 12-ல் இருந்து 18 சதவீதமாக என ஜி.எஸ்.டி-யை உயர்த்தி அதை 18.07.2022 முதல் அமலுக்கு வரச் செய்துள்ளது. இதனால் அன்றைய தேதியில் நிலுவையில் உள்ள பணிகள், நடைபெறும் பணிகள், புதிதாக துவங்கும் பணிகள் அனைத்திற்கும் சட்ட விதிகளின் படி மத்திய அரசு உயர்த்திய 18 சதவீத ஜிஎஸ்டியை-யை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும்,

புதிய அரசாணை 195 மற்றும் 35-ன் படி திருத்தப்பட்ட ஒப்பந்ததாரர் பதிவு தமிழக அரசின் அனைத்து இதர துறைகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான பணவரம்புடன் கூடிய பதிவு வகுப்புகள் அமைய வேண்டும். அரசின் மற்ற துறைகளிலும் தனித்தனியே பதிவுகள் கோரும் பட்சத்தில், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் பதிவுகளையே அனுசரித்து அதே போன்ற ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கான பண வரம்புடன் கூடிய ஒப்பந்ததாரர்கள் பதிவுகள் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட வேண்டும் என்றும்

தமிழக அரசின் அனைத்து இதர துறைகளிலும் ஒப்பந்தப் புள்ளிகளுக்கான ஒப்பந்த உடன்படிக்கை துறைக்குத் துறை மாறுபடாமல் பொதுப்பணித்துறை ஒப்பந்த உடன்படிக்கை போல் அனைத்து துறைகளுக்கும் அமைய வேண்டும். ஒரே அரசு – ஒரே உடன்படிக்கை என்னும் விதமாக அமைய வேண்டும் என்றும்

பொதுப்பணித்துறையினரால் வெளியிடப்படும் விலைப் பட்டியலில், மின்சாரம் மற்றும் கட்டுமானத்திற்கு உகந்த தண்ணீருக்கான செலவு, தொழிலாளர்கள் தங்குமிடம் அமைப்பதற்கான செலவு, தொழிலாளர்களுக்கான காப்பீடு பீரிமியத் தொகை, வேலைத் தளத்திற்கு செல்வதற்கான அணுகுசாலை வசதி போன்றவற்றிற்கான செலவுகள் மற்றும் அரசு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கான லாபம் போன்ற அனைத்தும் மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டு, மத்திய பொதுப்பணித்துறையில் உள்ளது போல் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும்,

பொதுப்பணித்துறை உருவாக்கப்படுவதற்கு முன்பிலிருந்து டேட்டா முறையை மாற்றி அமைக்க வேண்டுமென நமது அமைப்பின் சார்பில் பல வருடங்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க பொ.ப.து அமைச்சரால் டேட்டாவில் திருத்தம் ஏற்படுத்த வல்லுனர்கள் அடங்கிய டேட்டா திருத்தம் தொடர்பான குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைகளை விரைந்து பெற்று அமுல்படுத்துமாறு தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்படுகின்றது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பொ.ப.து ஒப்பந்ததாரர்களும் திருத்தப்பட்ட அரசாணையின் படி பொ.ப.து அமைச்சர், நமது அமைப்பை கேட்டுக் கொண்டதற்கிணங்க காலம் தாழ்த்தாமல் அவரவர்கள் விரைந்து பதிவு செய்ய வேண்டுமென என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜசேகர் வரவேற்றார், முடிவில் மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!