Those willing to create small quantities of 3 Dairy units can apply – Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் ;

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பாண்டிற்கு சிறிய அளவிளான 3 பால் பண்ணை அலகுகள் உருவாக்க ஒரு அலகிற்கு 25 சதவீத அரசு மானிய தொகையாக ரூ.1.25 இலட்சத்திலும் 75 சதவீதம் பயனாளியின் பங்களிப்பு தொகையாக ரூ.3.75 இலட்சத்திலும் மொத்தம் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்திட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொட்டகை அமைத்திட குறைந்தபட்சம் 300 சதுரஅடி இடம் சொந்தமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ இருக்க வேண்டும். தீவனப்புல் வளர்த்திட பாசன வசதியுடன் கூடிய குறைந்தபட்சம் 1 ஏக்கர் அளவில் நிலம் சொந்தமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ இருக்க வேண்டும்.

மேலும், கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் பெயர், வயது, முகவரி, ஆதார் எண், கைபேசி எண் மற்றும் பாஸ்போட் அளவில் இரண்டு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் இருப்பிடச்சான்று, நில உரிமை சான்று மற்றும் வங்கி கணக்கு விபரம் இணைக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நலதிட்டங்களில் ஏற்கனவே பயன்பெற்றவராக இருக்கக்கூடாது. தேர்வு செய்யப்படும் பயனாளிகள் கால்நடைகளை இரண்டு ஆண்டுகள் வரை பராமரித்திட உறுதியளிக்க வேண்டும்.

பாலை அருகில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் மட்டுமே ஊற்ற வேண்டும். மொத்த பயனாளிகளில் 30 சதவீதம் பயனாளிகள் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினராக தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பங்களை தங்களது பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள் மூலமாக வரும் மே 31 -க்குள் அளித்திட வேண்டும். பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வு குழுவினர் மூலமாக தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!