பெரம்பலூர் குன்னம் அருகே நிலத்தகராறில் பெண்னை தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை மருவத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அருமடல் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி அமிர்தம்(50), விவசாய பணியில் ஈடுபட்டு வரும் இவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த உறவினரான திருவேங்கடம் மகன் கண்ணுசாமி(50), என்பவருக்கும் அருகருகே விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில் அமிர்தம் தனது வயலில் பயிரிட்டுள்ள மக்காச்சேளத்தை அறுவடை செய்வதற்காக டிராக்டருடன் இணைக்கப்பட்டிருந்த மக்காச்சோள அறுவடை இயந்திரத்துடன் கண்ணுசாமியின் நிலத்தின் வழியாக கடந்த 5ந்தேதி வயலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்க வந்த கண்ணுசாமி மற்றும் அவரது குடும்பத்தார். ஏன் எனது வயல் வழியாக செல்கிறாய் என அமிர்தத்தை தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
இதில் காயமடைந்ததோடு, மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அமிர்தம் தன்னை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து கொண்டு, மருவத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கண்ணுசாமி(50), அவரது மனைவி செல்வராணி(40) மற்றும் மகள் ஆர்த்தி(19) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.