three robbers stole in perambalur the blockage in prison
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜே.ஜே. நகர் மருத்துவர் சுதாகர் என்பவர் தோல் மற்றும் ரோமம் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையும், காதர்பாட்சா என்பவர் பேன்சி ஸ்டோரும் , சுதாகர் என்பவர் ஜெராக்ஸ் கடையும் நடத்தி வருகிறார்.
கடந்த ஜுலை 5ம் தேதி கொள்ளையர்கள் மருத்துமவமனையின் பூட்டை அறுத்து எடுத்து, ரூ. 2 ஆயிரம் ரொக்கத்தையும் அருகே உள்ள காதர்பாட்சா கடையின் பூட்டை உடைத்து சீட்டு கட்டுவதற்காக வைத்திருந்த ரொக்கம் ரூ. 30 ஆயிரம் மற்றும் சோப், எல்.ஈ.டி., பல்புகள், மற்றும் செல்போன் ரீசார்ஜ் கார்டுகளையும், அருகே இருந்த சுதாகர் என்பவரின் ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் ரூ. 2 ஆயிரத்தையும் எடுத்து சென்றனர். கொள்ளை மதிப்பு சுமார் 50 ஆயிரம் இருக்கும், இது குறித்து மூவரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில், கர்நாடக மாநிலம், பெங்களூர் எடன்புறா பகுதியை சேர்ந்த ரவி (எ) கிருஷ்ணப்பா (வயது 58), திருச்சி மாவட்டம், செங்காட்டுப்பட்டியை சேர்ந்த ராஜு மகன் மணிகண்டன் (வயது 23), மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் செந்தில் (வயது 30) என்ற மூவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. நாமக்கல்லில் தங்கி இருந்த ரவி (எ) கிருஷ்ணப்பாவையும், துறையூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன், செந்தில் ஆகிய மூவரையும் கைது செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.