Tomorrow’s farmers’ meeting on behalf of the movement for sustainable rainfed agriculture

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் விடுத்துள்ள தகவல்:

தமிழக அரசு மானாவாரி விவசாயிகளின் மேம்பாட்டிற்காக ரூ.802.90 கோடி செலவில் “நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம்” என்னும் மாபெரும் திட்டத்தினை 2016-17-ம் ஆண்டு தொடங்கி 2019-20-ம் ஆண்டு வரை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம் தொகுப்புக்கு 1000 எக்டர் வீதம் 1000 தொகுப்புகளில், கிராம மானாவாரி விவசாயிகள் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின்படி மானாவாரி விவசாய பகுதி மேம்பாட்டிற்காக மழை நீர் சேகரிப்புகள் அமைத்தல், கோடை உழவு செய்தல் 50 சத மானியத்தில் விதைகள், நுண்ணுயிர்கள், நுண் சத்துக்கள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் இயந்திர வாடகை மையம் அமைத்தல் மற்றும் கால்நடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு 2017-18-ம் ஆண்டில் கல்பாடி, கொளக்காநத்தம், பசும்பலூர், வெண்பாவூர், மருவத்தூர் மற்றும் வேப்பூர் உள்ளிட்ட 6 மானாவாரி தொகுப்புகளில் 7 மானாவாரி விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு 15,000 ஏக்கர் மானாவாரி நிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் செவ்வனே செயல்படுத்த மானாவாரி விவசாய குழுக்கள் கூட்டம் இம்மாதம் நாளை நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மானாவாரி குழு விவசாயிகள் தோட்டக்கலை துறை மூலம் மானாவாரி விவசாயிகளுக்கு விலை இல்லாமல் நெல்லி மற்றும் மாதுளை பழமரக்கன்றுகளை அருகிலுள்ள தோட்டக்கலை பண்ணையில் இருந்து பெற்று உடனடியாக நடப்பு டிசம்பர் மாதத்திற்குள் நடவு செய்திட தேவைப்படும் விவசாயிகள் பட்டியலை பரிந்துரை செய்தல்,

பயிர்பாதுகாப்பு மேற்கொள்ளும்போது முகமூடி, கையுறை அணிந்து பயிர் பாதுகாப்பு மருந்துகளை முன்னெச்சரிக்கையுடன் தெளித்திடுதல், 3 சத வேப்பகொட்டை கரைசல், வேப்பண்ணெய் சார்ந்த பயிர் பாதுகாப்பு மருந்துகளை பூச்சி விரட்டிகளாக பயன்படுத்துதல், அதிக வீரிய நச்சு கொண்ட (சிகப்பு முக்கோணம் பொறித்த) பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்த்தல்,

உழவு மானியம் ஏக்கருக்கு ரூ.500- பின்னேற்பு மானியம் வழங்கிட உழவுப்பணி முடித்த விவசாயிகள் பட்டியலை தாமதமில்லாமல் பரிந்துரை செய்தல், சம உயர வரப்புகள் அமைத்து மழை நீரை சேகரித்து பயிர் சாகுபடிக்கு உரிய முறையில் பயன்படுத்துவது குறித்து விவாதித்தல், தொகுப்பில் விளையும் தானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது குறித்து விவாதித்தல்,

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மதிப்பு கூட்டும் இயந்திரங்களை வைக்க வேண்டிய இடம் மற்றும் நிர்வாகம் குறித்து முடிவு செய்தல், தொகுப்பிற்கான இயந்திர வாடகை மையங்களுக்கு தேவையான இயந்திரங்களை பரிந்துரை செய்தல் போன்ற பணிகள் விவாதிக்கப்பட உள்ளன. எனவே மேற்கண்ட குழுவில் உள்ள விவசாயிகள் அனைவரும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம், என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!