Try to reduce 20 tons of daily garbage and waste in the municipality of Namakkal: Municipal commissioner
நாமக்கல் நகராட்சியில் தினமும் சேரும் குப்பைகளை 30 டன்னிலிருந்த 20 டன்னாக குறைக் நகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக கமிஷனர் கூறினார்.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் மூலம் நகரப் பகுதிகளில் குப்பைகள் சேருவதை தடுக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதன்படி, நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் தினமும் 50 கிலோவுக்கு மேல் குப்பையை உருவாக்குபவர்கள், அதனை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து நகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். அல்லது அந்த இடத்திலேயே குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக மாற்றிக்கொள்ளலாம்.
இதுகுறித்து விளக்கம் அளிக்க ஹோட்டல்கள், திருமண மண்டபம், கல்வி நிலையங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சியில் பேசியதாவது: நாமக்கல் நகராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன் வரை தினமும் 48 டன் குப்பைகள் சேர்ந்தன. இப்போது தினமும் 38 டன்னாக குறைந்துள்ளது. இதனை மிக விரைவில் 20 டன் என்ற அளவுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம்.
நாமக்கல் நகராட்சியில் தினசரி 50 கிலோவுக்கு மேல் குப்பை சேரும் இடங்கள் என 85 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் குப்பைகளை கட்டாயம் தரம் பிரித்து தான் வழங்க வேண்டும். தரம் பிரிக்காமல் குப்பைகளை சேகரித்து வைத்தால், அந்த குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்படும்.
தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளால் கடந்த 6 மாதங்களில் நாமக்கல் நகராட்சியில் 15 அடிக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் சேரும் குப்பைகளை அந்த வளாகத்திலேயே அழிக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் பெருமளவில் குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு அந்த குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது, அதனை உரமாக மாற்றுவது குறித்து விளக்கம் அளிக்க நாமக்கல் நகராட்சிப் பகுதியில் 4 இடங்களில் ஒரு மாதத்தில் செயல்விளக்க மையம் தொடங்கப்படும். இதன் மூலம் குப்பை சேருவது பெருமளவு குறையும். இதனால் நகராட்சியின் செலவினமும் குறைவதோடு, மேலாண்மை செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறையும் என்றார்.
ஓட்டல் அதிபர்கள் கோரிக்கை
கூட்டத்தில் பேசிய ஹோட்டல் உரிமையாளர்கள், நாமக்கல் நகரப் பகுதியில் நகராட்சியால் அடையாளம் காணப்பட்டுள்ள ஒட்டல்கள் மற்றும் நிறுவனங்களில் குப்பைகளை சேரும் இடத்திலேயே பிரித்துக் கொடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனால் நகராட்சி நிர்வாகம் 3 ஏக்கர் அளவுக்கு இடத்தைக் கொடுத்தால் அங்கு வைத்து குப்பைகளை தரம் பிரித்து வழங்க தயாராக உள்ளோம். இதுபோல் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் உணவுக் கழிவுகளை பெற்றுக்கொள்ளவும் நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.