Typewriting School Principal killed by swine flu in Namakkal: Notices to hospital
நாமக்கல்லில் இறந்து போன முதியவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது குறித்து தகவல் தெரிவிக்காத தனியார் ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
நாமக்கல் நகராட்சி 34-வது வார்டுக்கு உட்பட்டது கணேசபுரம். இங்குள்ள சிவஞானம் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (81). இவர் நாமக்கல்லில் டைப்ரைட்டிங் மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி நிலையம் நடத்தி வந்தார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராமதாஸ் உயிரிழந்தார். இதையடுத்து காலை நாமக்கல் நகராட்சி சார்பில் சிவஞானம் தெருவில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ராமதாசுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதை தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் அரசின் சுகாதார துறைக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
அதற்கு விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருந்ததாவது:-
நோயாளிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதை ஆஸ்பத்திரி நிர்வாகம் மாவட்ட பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கவில்லை. அதேபோல் நோய் தொற்று ஏற்பட்ட நோயாளியை ஒதுக்கப்பட்ட பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்காமல், பொதுப்பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
எனவே 3 வேலை நாட்களுக்குள் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்களை சரி செய்து எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். தவறினால் பொது சுகாதார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மாவட்ட பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.