Undeclared power line in power over state: civic suffering from mosquitoes
பெரம்பலூர் மாவட்டத்தில், கிராமப்புறங்களில், கடந்த சில நாட்களாகவே முன்னறிவிப்பு இல்லாத அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இந்த மின் வெட்டால் மாணவர்கள் படிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும், இரவு 8 – 9 மணி அளவில் அடிக்கடி அறிவிக்கப்படாமல் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், குழந்தைகள் உள்ளிட்ட பெரியவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஓரிரு நாட்களில் நள்ளிரவு நேரங்களில் அறிவிக்கப்படாமல் மின்வெட்டு உண்டாகிறது. அமைதியாக மழை பெய்கிறது. ஆனால், பலத்த காற்றோ, இடி மின்னலோ இல்லை, ஆனால், மின்வாரியம் மின்இணைப்பை துண்டிக்கிறது.
மின்வெட்டு காரணமாக கொசுக்கள் ரீங்காரமிட்டு வட்டமடித்து தூங்க விடாமல் செய்கிறது. மேலும், கொசுக்கள் கடிப்பதால் டெங்கு அல்லது மர்ம காய்ச்சல் ஏற்பட்டு விடுமோ என அச்சமடைகின்றனர். நள்ளிரவு நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் தூக்கம் தொலைப்பதுடன் கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை என தெரிவிக்கும் பொதுமக்கள், பகல் நேரத்தில் மின்வாரியம் குறிப்பிட்ட நேரத்தை மின்சாரத்தை துண்டிப்பதற்காக எடுத்துக் கொண்டு அறிவிக்க வேண்டும், இரவு நேரத்தில் முழுவதுமாக மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த திமுக ஆட்சி வீழ்வதற்கு முக்கிய காரணங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஒன்று. அதன் பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மின்மிகை மாநிலமாக தமிழகத்தை அறிவித்தார். தற்போது ஆட்சியாளர் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
மின்மிகை மாநிலம் என அறிவித்து கொள்ளும் தமிழக அரசு தடையற்ற மின்சாரம் கிராமங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.