பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் (என்.எஸ்.எப்.டி.சி) தேசிய துப்புரவு பணியாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் (என்.எஸ்.கே.எப்.டி.சி) திட்டத்தின் கீழ் கடன் பெற்றுள்ள ஆதிதிராவிட மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தாங்கள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி ஆகும் எனக் கருதி கடனை செலுத்துவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இக்கடன் தள்ளுபடி ஆக வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டும், கடனை மீளச் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். கடன் தொகையினை வட்டியுடன் செலுத்தாமல் இருப்பதால் கடனுக்கான வட்டித் தொகை அதிகரிப்பதோடு, கடனுக்கு ஈடாக தாட்கோ அலுவலகத்தில் வைத்துள்ள பிணையப் பத்திரங்களையும் மீட்க இயலாத நிலையில் இருந்து வருகின்றனர்.

அரசாணை எண்.26, ஆதிமபந துறை, நாள் 13.04.2017-ன்படி ஆதித்திராவிடர்களின் சிரமத்தைப் போக்குகின்ற வகையில் என்.எஸ்.எப்.டி.சி மற்றும் என்.எஸ்.கே.எப்.டி.சி திட்டத்தில் கடன் பெற்றுள்ளவர்கள் அசல் மற்றும் வட்டியினை ஒரே தவணையிலோ அல்லது மூன்று சம தவணைகளிலோ செலுத்த எழுத்துப் பூர்வமாகச் சம்மதித்தால் அபராத வட்டியினைத் தள்ளுபடி செய்திடவும், கடனுக்கு ஈடாக வைத்துள்ள பிணையப் பத்திரங்களை உடனடியாகத் பயனாளிக்கு வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, மேற்படி திட்டத்தில் கடன் பெற்றவர்கள் ஒரே தவணையிலோ அல்லது மூன்று சம தவணைகளிலோ கடன் மற்றும் வட்டியினைச் செலுத்தி பிணையம் செலுத்தியுள்ள ஆவணங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு கணக்கை முடித்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே. மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களில் கடன் பெற்றுள்ள பெரம்பலூர் மாவட்டதை சேர்ந்த ஆதி திராவிடர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கடனை திரும்பச் செலுத்தி பயன்பெறலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!