We will bless the September 17th Social Justice Conference and sacrifice! PMK Founder Ramadoss பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள மடல் !

அன்புள்ள பாட்டாளி சொந்தங்களே…!

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எவரும் செப்டம்பர் 17-ஆம் தேதியை மறக்க முடியாது… மறக்கவும் கூடாது.

காரணம் அது பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்தநாள் மட்டுமல்ல… தமிழகத்தில் சமூகநீதி தழைப்பதற்காக 21 பாட்டாளி சொந்தங்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த நாள்.

அந்த தியாகம் தான் தமிழ்நாட்டிலுள்ள 108 சமுதாயங்களைச் சேர்ந்த மூன்று கோடி மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து சமூக நீதியை நிலை நிறுத்தியது.

தமிழகத்தில் இன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற தனி வகுப்பு இருக்கிறது… அப்பிரிவைச் சேர்ந்த மக்கள் கல்வி கற்று, வேலையில் சேர்ந்து ஓரளவு முன்னேற முடிந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அன்று 21 தியாகிகள் தங்களின் இன்னுயிரை ஈந்து பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீடு தான்.

அந்த தியாக திருவுருவங்களின் நினைவு நாளை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி பாட்டாளி சொந்தங்களாகிய நாம் அனைவரும் போற்றிப் பெருமைப்படுத்துகிறோம்.

இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு 30-ஆவது ஆண்டு நினைவு நாள் என்பதால் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வரும் 17-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு விழுப்புரம் புறவழிச்சாலை ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய அளவில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்த மாநாட்டில் நான் சிறப்புரை ஆற்றுகிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சமூகநீதி எழுச்சியுரை நிகழ்த்தவிருக்கிறார். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ஜெ.குரு ஆகியோர் மிகச்சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து மாநாடுகளையும் விஞ்சும் வகையில் இந்த சமூக நீதி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதி வரலாற்றில் இந்த மாநாடு நிச்சயமாக ஒரு மைல்கல்லாக அமையும் என்பது நிச்சயமாகும்.

தமிழகத்தின் சமூகநீதிப் பயணத்தில் இன்றைய காலக்கட்டம் என்பது மிகவும் முக்கியமானதாகும். சமூக நீதியையும், சமத்துவத்தையும் குலைப்பதற்கான சதிகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு தமிழகத்தில் நடத்தப்பட்டு வந்த பொது நுழைவுத்தேர்வை பாட்டாளி மக்கள் கட்சி தான் சட்டப் போராட்டம் நடத்தியும், அரசியல் அழுத்தம் கொடுத்தும் 2007 – ஆம் ஆண்டில் ரத்து செய்ய வைத்தது.

ஆனால், இப்போது தேசிய அளவில் நீட் என்ற பெயரில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை மத்திய அரசு திணித்திருக்கிறது.

இதனால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நொறுங்கிப் போய்விட்டன. மத்தியப் பாடத்திட்டத்தில் படித்ததுடன் சிறப்புப்பயிற்சியும் பெற்றவர்களுக்குத் தான் மருத்துவக் கல்வி சாத்தியமாகியிருக்கிறது.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைத் தொடர்பாக நேற்று வெளியான இன்னொரு உண்மை இதயத்தில் வலியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 5 பேர் மட்டும் தான் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதுவும் அவர்களில் மூவருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூட இடம் கிடைக்கவில்லை.

மாறாக தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தான் அதிக கட்டணம் செலுத்தி சேர்ந்துள்ளனர். இது தான் நீட் தேர்வால் விளைந்த சமூக அநீதியாகும்.

இதுமட்டுமின்றி, அரசுத்துறை வேலைவாய்ப்புகள், சம வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருதல், மனித உரிமைகளை பாதுகாத்தல் உட்பட சமூக நீதியின் அனைத்து அம்சங்களுமே இப்போது ஆபத்தானக் கட்டத்தில் தான் உள்ளன.

30 ஆண்டுகளுக்கு முன் எனது அழைப்பை ஏற்று, எனது தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தி 21 உயிர்களை ஈந்து தான் 20% இட ஒதுக்கீடு பெற்றோம். ஆனால், அதன் பயன்களை அனுபவிக்க முடியாதபடி தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

இத்தகைய சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும், போராடிப் பெற்ற சமூகநீதியை பாதுகாக்கவும் தான் விழுப்புரத்தில் வரும் 17-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் சமூகநீதி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டை வெற்றி பெறச் செய்வதன் மூலம் 21 சொந்தங்களின் தியாகத்திற்கு மரியாதை செய்ய முடியும்.

சமூக நீதிக்காக நான் ஒவ்வொருமுறை அழைப்பு விடுக்கும் போதும் பாட்டாளி சொந்தங்கள் போர்ப்பரணி பாடி களமிறங்குவது வாடிக்கை. அதைப் போலவே நமது லட்சியப் பயணத்தின் முக்கிய மைல்கல்லான இம்மாநாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கவிருப்பது பாட்டாளிகளின் வருகை தான்.

பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் இம்மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். அதைவிட மிகவும் முக்கியம் நமது கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பது தான்.

பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் விழுப்புரம் மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன், என அதில் தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!