Will the Tindivanam-Trichy Road Expansion be extended for private enterprise PMK. Ramadoss
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :
சென்னையிலிருந்து சேலத்திற்கு விரைவுச் சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, திண்டிவனம் – திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டத்திற்கு ஒதுக்கப் பட்டிருந்த நிதியை செலவிட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. இதனால் திண்டிவனம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களின் பரிந்துரை அடிப்படையிலேயே இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
சென்னையிலிருந்து சேலத்திற்கு மிக விரைவாக செல்வதற்கு வசதியாக திருவண்ணாமலை, அரூர் வழியாக 277.30 கி.மீ நீளச் சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தீர்மானித்துள்ளது. இத்திட்டம் ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சிக்கு மிக அவசியம் என்பதால், சென்னை – சேலம் இடையே புதிய நெடுஞ்சாலை அமைப்பதை விமர்சிப்பது நியாயமல்ல. ஆனால், தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை இணைக்கும் மிக முக்கியமான சாலையின் விரிவாக்கத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு, அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு சென்னை – சேலம் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கான 45-ஆவது தேசிய நெடுஞ்சாலை ஆகும். நான்கு வழித்தடங்களைக் கொண்ட இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் திண்டிவனம் முதல் திருச்சி வரையிலான 203 கி.மீ நீள சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற கடந்த 2005-ஆம் ஆண்டில் விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அத்திட்டத்திற்கு அண்மையில் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படவிருந்தன. ஆனால், திடீரென அத்திட்டம் கைவிடப்பட்டு அதற்கான நிதியைக் கொண்டு சென்னை – சேலம் நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.
திண்டிவனம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தை கைவிடுவது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். தமிழகத்தில் மிகவும் நெரிசலான சாலை 45 ஆவது தேசிய நெடுஞ்சாலை தான். இந்த சாலை வழியாக தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நெரிசல் காரணமாக இந்த சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து போகும் அவலநிலை காணப்படுகிறது. சில நேரங்களில் சென்னையிலிருந்து திருச்சி செல்ல 10 மணி நேரத்திற்கும் மேலாகிறது. இந்த நிலையை மாற்றுவதற்காகத் தான் சென்னை முதல் திருச்சி வரையிலான சாலையை விரிவாக்க திட்டமிடப்பட்டது. அதில் தாம்பரம் – திண்டிவனம் இடையிலான விரிவாக்கப்பணிகள் சில காரணங்களால் தடைபட்டுள்ள நிலையில், திண்டிவனம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பணிகளையும் மத்திய அரசு கைவிட்டிருப்பது எவ்வகையில் நியாயம்?
சென்னையிலிருந்து சேலத்திற்கு புதிய சாலை அமைப்பதற்கு எந்த அவசரமும், அவசியமும் இல்லை. ஏனெனில் சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாகவும், கிருஷ்ணகிரி வழியாகவும், திருவண்ணாமலை வழியாகவும் சேலம் செல்ல 3 நெடுஞ்சாலைகள் உள்ளன. ஆனால், சென்னையிலிருந்து தெற்கு மாவட்டங்களுக்கு செல்ல ஒரே ஒரு தேசிய நெடுஞ்சாலை தான் உள்ளது. அதுதான் தேசிய நெடுஞ்சாலை எண்-45 ஆகும். அதுமட்டுமின்றி, சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை விட சென்னை – திருச்சி சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். இவ்வளவு நியாயமான காரணங்கள் இருந்தாலும் திண்டிவனம்& திருச்சி சாலை விரிவாக்கத் திட்டம் கைவிடப்பட்டு, சேலம் – சென்னை பசுமைவழித்தட விரைவுச்சாலை அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு காரணம் சிலரின் சுயநலனும், சுய இலாபமும் தான்.
சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மலைகளில் குவிந்து கிடக்கும் இரும்புத் தாதுவை ஜிண்டால் குழுமம் வெட்டி எடுக்கவுள்ளது. அந்த நிறுவனத்தின் வசதிக்காகவே சேலத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு சாலை அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு துணையாக இருப்பதற்காக பினாமி ஆட்சியாளர்களுக்கு பெருமளவில் பொருளாதார பயன்கிடைக்கும். அதனால் தான் முக்கியமான சாலையை விரிவாக்கும் பணியை கைவிட்டு, மக்களுக்கு பயனில்லாத சென்னை – சேலம் செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு பினாமி அரசு பரிந்துரைத்துள்ளது. இதை மன்னிக்க முடியாது. அதுமட்டுமின்றி, சேலம் – சென்னை விரைவுச்சாலைக்காக பல ஊர்களில் உழவர்களுக்கு சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் நிறுவன நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகத்தின் நலன்களையும் காவு கொடுக்கக்கூடாது.
எனவே, தமிழகத்தின் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் 45-ஆவது தேசிய நெடுஞ்சாலையை தாம்பரம் முதல் திண்டிவனம் வழியாக திருச்சி வரை 6 வழிப்பாதையாக அகலப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.