World Breastfeeding Week held at Perambalur Collector’s Office!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா வெங்கடபிரியா தலைமையில் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.
உலக தாய்ப்பால் வார விழா – 2022 ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வார விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. உலகளாவிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8.20 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
ஊட்டச்சத்து பற்றாக்குறையை முழுவதும் சரிசெய்வதற்கு தாய்ப்பால் ஊட்டுவதை 100 சதவீதம் எட்ட வேண்டியுள்ளது. குழந்தை பிறந்து அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் சீம்பால் குழந்தைக்கு கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும். முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தையின் இரண்டாவது வயது வரையிலும் துணை உணவுடன் தாய்ப்பாலும் தொடர்ந்து கொடுக்க வலியுறுத்தி கூறப்படுகிறது.
தாய்ப்பால் வார விழாவின் முதல் நாளில் பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் எடை மற்றும் நீளம் அளவிடப்பட்டு, குழந்தைகள் மைய அளவில் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு உறுதி செய்யப்பட்டது.
இரண்டாம் நாளில் ஆரம்ப சுகாதார மையங்களில் கர்ப்பிணிப் பெண்களின் மாதாந்திர பரிசோதனை நாளில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து 1,000 நாட்களின் முக்கியத்துவம், சீம்பாலின் மகத்துவம் மற்றும் 2 வருடங்கள் தொடர்ந்து தாய்பால் ஊட்டுதலின் நன்மைகள் குறித்தும் மருத்துவ அலுவலர் மற்றும் கிராம சுகாதார செவிலியருடன் இணைந்த விழிப்புணர்வு நலக் கல்வி வழங்கப்பட்டது.
மூன்றாம் நாளில் புதுமணத் தம்பதியருக்கும், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. வேப்பூர் வட்டாரம் குன்னத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நான்காம் நாள் மாவட்ட அளவிலான தாய்ப்பால் வார விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன விளம்பர வாகனத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் விழிப்புணர்வு குறும்படம் மூலம் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள கலெக்டர் வெங்கடபிரியா மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மேலும், கர்ப்ப காலங்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் காலங்களில் தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டு விழாவிற்கு வருகை புரிந்த 25 கர்ப்பிணிகளுக்கு ரூ.1,000 மதிப்பிலான நெய், சிவப்பு அவல், தேன், பொரி, பொட்டுக்கடலை, வெல்லம், பேரிச்சம்பழம், வேர்க்கடலை, கடலை மிட்டாய், சத்து மாவு ஆகிய பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் வெங்கடபிரியா, எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். அனைவருக்கும் தாய்ப்பால் வார விழா கையேடு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சி.ராஜேந்திரன், டி.ஆர்.ஓ நா.அங்கையற்கண்ணி, பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), பிரபா செல்லப்பிள்ளை(வேப்பூர்), க.ராமலிங்கம் (வேப்பந்தட்டை), குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், பெரம்பலூர் யூனியன் துணை சேர்மன் சாந்தாதேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.