World Literacy Day rally on behalf of the program Kargum Bharatham in perambalur
பெரம்பலூர் : ஒவ்வொரு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. எனவே உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு இன்று (09.09.2016) பாலக்கரை ரவுண்டான அருகில் கற்கும் பாரதம் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற பேரணியை ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கற்கும் பாரதம் திட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மையப் பொறுப்பாளர்கள் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தலைமையில் உலக எழுத்தறிவு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் எழுத்தறிவு பெறுவதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியவாறும், கோஷங்களை எழுப்பிய வண்ணம் நகரை வலம் வந்தனர். இப்பேரணி பாலக்கரையிலிருந்து தொடங்கி ரோவர் வளைவை அடைந்தது.
இப்பேரணியில் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, கற்கும் பாரதம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.