கடந்த 1975-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியைக் காட்டிலும் நாட்டில் இப்போது பாஜக ஆட்சியில் நிலவும் சூழல் மோசமாக இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.கடந்த 1975-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மறைந்த இந்திரா காந்தியை பதவியிலிருந்து விலக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஜுன் 25-ம் தேதி அவர் நாட்டில் அவரசநிலையை கொண்டுவந்தார். அதுமுதல் 2 ஆண்டுகளுக்கு நாட்டில் அவசரநிலை நீடித்தது. அப்போது பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது, கருத்துச்சுதந்திரம் பறிக்கப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக கடைப்பிடித்து கறுப்புநாளாக அனுசரித்து வருகிறது.இது குறித்து ஆங்கில செய்தித்தொடலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பாஜகவின் முன்னாள் மூத்த உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:நாட்டில் எமர்ஜென்சி 43 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்டு, 2 ஆண்டுகளில் நீக்கப்பட்டது. இப்போதுள்ள தலைமுறை அதை மீண்டும் புதுப்பித்துப் பார்ப்பது இல்லை. எமர்ஜென்சி என்பது அவர்களுக்கு வரலாறாகும்.இதில் முக்கியமாக,நாம் பார்ப்பது என்னவென்றால், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் எமர்ஜென்சியைக் கொண்டுவந்த காரணத்துக்காக, அவர் கடந்த 1977-ம் ஆண்டு தேர்தலில் மக்களால் தண்டிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டார். இப்போது இது வரலாற்றின் பகுதியாக மாறிவிட்டதால், அது குறித்து விவாதிக்க முடியாது.ஆனால், இப்போது பாஜக ஆட்சியில் நாட்டில் நிலவும் சூழல் எமர்ஜென்சியைக் காட்டிலும் மோசமாக இருக்கிறது. வரலாற்றில் எப்போதோ நடந்த நிகழ்வு இப்போது பாஜகவினரால் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் வரும் தேர்தலை கணக்கிட்டுச் செய்யப்படுகிறது.
கடந்த எமர்ஜென்சியைப் போல், இப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைக்குள் வைக்கப்படவில்லை, ஆனாலும் நிலைமை மோசமாகவும், அச்சம் சூழ்ந்தும், மக்கள் அச்சுறுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள், மக்கள் எது குறித்தும் பேசுவதற்கு அஞ்சுகிறார்கள். மத்திய அமைச்சர்கள் கூட விதிவிலக்கு இல்லை. இந்தச் சூழல் இந்திராகாந்தி காலத்தில் இருந்த எமர்ஜென்சியைக் காட்டிலும் மோசமாக இருக்கிறது.இப்போதுள்ள பாஜக அரசில் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு அவர்கள் அந்நிறுவனத்தின்மூலம் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இன்றைய சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. ஊடகங்கள் முழுவதுமாக மக்களுக்குத் தவறானவற்றை சித்தரிக்கும் தோற்றத்தை உண்டாக்குகின்றன.
இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.