தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள் அனைவரையும் மாற்றினால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என அல்தாபி தலைமையில் நடைபெற்ற தவ்ஹீத் கொள்கை சொந்தங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளில் கடந்த 20 ஆண்டுகளாக முற்போக்கு சிந்தனையுடன் இயங்கி வருகிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்னும் அமைப்பு.இந்த அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் தலைவர் அல்தாபி தமது ஆதரவாளர்களுடன் கடந்த சில மாதங்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
மேலும்வெளிநாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு தாவா பணிகளிலும் ஈடுபட்டார். தற்போது அவரது ஆதரவாளர்கள் தலைமையிலான இளைஞர்களின் கூட்டம் தமிழகம் முழுவதும் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இந்த சூழலில் அல்தாபி தமிழகம் திரும்பிய பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்து திருச்சியில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த தவ்ஹீத் கொள்கை சொந்தங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் நிர்வாகிகள் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மாநில செயலாளர் சேப்பாக்கம் அப்துல்லா, மாநில செயலாளராக இருந்தவரும் சமூக ஒற்றுமை சங்கத்தின் மாநில தலைவருமான பதுருல் ஆலம்,பொதுச்செயலாளர் வண்ணை சுல்தான், பொருளாளர் ரபீக், துணைத்தலைவர் கமருதீன் , துணை செயலாளர் சம்சுதீன் , ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துல் ரசாக் , திருப்பூர் அதிரடி பஷீர், அப்துல் ரகுமான், குமரி மாவட்ட களப்பணியாளர் , முன்னாள் மேலாண்மை குழு உறுப்பினர் ஹாஜாநூகு , அப்துல் ஜலீல், அப்துல் ரகுமான், திருச்சி சேக் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் மற்றும் இயக்கத்தின் களப்பணியாற்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்து இருந்த நிர்வாகிகள் அனைவரும் தங்களது கருத்துகளை முன் வைத்தனர். காலைமுதல் மாலை வரை நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வைக்கப்பட்ட அனைத்து நபர்களின் கோரிக்கைகளும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து இறுதியில் அல்தாபி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது, தாங்கள் மனிதநேயத்தை பேணுபவர்கள் என்பதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்னும் அமைப்பை இரண்டாக உடைக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் தங்களுக்கு இல்லை என்றார். மேலும் ஒரே கொள்கையுடன் பயணிக்கும் தங்களின் ஏகத்துவ தோழர்களின் பயணம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்பதால், அதற்கு இடையூராக உள்ள நபர்களை இனம் கண்டு நீக்க வேண்டும் என்பதே தங்களின் வேண்டுகோள் என்றும் அல்தாபி கூறினார். அதன்படி தற்போது ஜமாத்தில் உள்ள மாநில நிர்வாகிகளில் பலரை நீக்கி நற்பண்புகளை உடைய தோழர்களை நிர்வாகிகளாக நியமித்தால் தாங்களும் அவர்களுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளோம் என்றும் தங்களுக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் என்றும் அல்தாபி தெரிவித்தார்.
மேலும் இறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள் அனைவரையும் மாற்றினால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என அல்தாபி தலைமையில் நடைபெற்ற தவ்ஹீத் கொள்கை சொந்தங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தவ்ஹீத் கொள்கை சொந்தங்களை இணைக்கும் விதமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தங்களது அமைப்பை வழிநடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். இதில் திருச்சி சேக், கடலூர் அஷரப் அலி, திருப்பூர் அப்துல் ரகுமான், சென்னை சுல்தான்,குமரி அப்துல்ரகுமான், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.